உள்ளூராட்சி தேர்தல் குறித்து முஷாரப் அணி மந்திராலோசனை
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எவ்வாறு போட்டியிடுவது சம்பந்தமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம் முஷாரப்பின் தலைமையில் அம்பாறை மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்பாளர்களுடனான கூட்டம் செவ்வாய்க்கிழமை(10) மாலை ஒலுவில் கடற்கரை விடுதியில் இடம் பெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் தேர்தலில் தனி அணியாக போட்டியிடுவதன் அவசியத்தை தெளிவு படுத்தியதுடன் பிரதேச முக்கியஸ்தர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார்.
பொத்துவில்இ சம்மாந்துறை மற்றும் கல்முனை தொகுதிகளில் உள்ள சபைகளில் பலமான அணியாக களமிறங்குவதற்கான ஏகோபித்த தீர்மானம் இங்கு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.இக்கூட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் கலந்து கொண்டதுடன் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களையும் இங்கு விளக்கப்படுத்தினார்.
இதில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பிரதேச ஒருங்கிணைப்பளர்கள், பிரதேச அமைப்பாளர்கள்,பாராளுமன்ற உறுப்பினரின் மாவட்ட செயலணிக்குழு முன்னணி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தல் வந்தாலும் அம்பாறை மாவட்டத்தில் அதனை எதிர்கொள்ள முஷாரப் அணியினர் துணிவுடன் களமிறங்கும் எனவும்
சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தலைமைகளுக்கு நமது அணியினர் பாடம் கற்றுக் கொடுக்க துணிந்துவிட்டனர் என பொத்துவில், சம்மாந்துறை மற்றும் கல்முனை தொகுதிகளில் இருந்து கலந்து கொண்ட அனைவராலும் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.