SuperTopAds

மாணிக்கமடு கிராமத்தில் கலைவாணி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கம் - 15 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் மலர்ச்சி

ஆசிரியர் - Admin
மாணிக்கமடு கிராமத்தில் கலைவாணி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கம் - 15 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் மலர்ச்சி

அம்பாறை மாவட்டத்தின் சர்ச்சைக்குரிய கஷ்ட பிரதேசமான இறக்காமம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மாணிக்கமடு கிராமத்துக்கு அம்பாறை கல்முனை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க சமாசத்தின் புதிய பணிப்பாளர் சபை ஞாயிற்றுக்கிழமை காலை விஜயம் மேற்கொண்டது.

மாணிக்கமடு கிராமத்தில் இயங்கி வந்த இரு சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்கள் செயல் இழந்து இருந்தன. இவ்விடயம் சமாச தலைவர் எஸ். லோகநாதனின் மேலான கவனத்துக்கு வந்தது. உடனடியாக மாணிக்கமடு கலைவாணி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தை புனரமைக்க நடவடிக்கை எடுத்தார்.

இவர் அடங்கலாக பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் கூட்டுறவு திணைக்களத்தின் கண்காணிப்பில் சங்கம் புனருத்தாரணம் செய்யப்பட்டது. 

15 வருடங்க்ளுக்கு முன்னர் செயல் இழந்திருந்த இச்சங்கத்தின் புனரமைப்புக்கான விசேட பொது கூட்டம் நடத்தப்பட்டு 07 பேர் கொண்ட புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. இதுவே அம்பாறை கல்முனை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க சமாசத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது வேலை திட்டம் ஆகும்.

மற்றைய சங்கத்தை புனரமைப்பு செய்வதற்காக தைப்பொங்கலை தொடர்ந்து மாணிக்கமடு கிராமத்துக்கு மீண்டும் செல்ல சமாசத்தின் பணிப்பாளர் சபை திட்டமிட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.