SuperTopAds

மருதமுனையில் புதிய மையவாடி அமைக்க பூர்வாங்க ஏற்பாடு

ஆசிரியர் - Editor III
மருதமுனையில் புதிய மையவாடி அமைக்க பூர்வாங்க ஏற்பாடு

மருதமுனை பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்து, மேட்டுவட்டை பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற மையவாடியை அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் கல்முனை மாநகர சபையினால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் பிரகாரம் குறித்த மையவாடிக்காக ஒதுக்கப்பட்ட காணியை கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி   மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்   முன்னிலையில் கல்முனை மாநகர சபையிடம் இன்று உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, ஏ.ஆர்.அமீர், எம்.எஸ்.எம்.ஹாரிஸ், எம்.ஐ.ரஜாப்தீன், ஏ.எஸ்.ஹமீட், ஏ.எச்.ஏ.ழாஹிர், சர்மில் ஜஹான் ஆகியோருடன் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், பொறியியலாளர் ஹலீம் ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.நிஸார் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

குறித்த காணியை மண்ணிட்டு நிரப்பும் ஆரம்பப் பணிக்கு 03 இலட்சம் ரூபாவை அன்பளிப்பு செய்வதற்கு வர்த்தகப் பிரமுகர் முஸ்தபா (BSc) இதன்போது முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.