இலங்கைக்கு தென் கிழக்கே தாழமுக்கம், வடக்கு கிழக்கு மாகாணங்களில் 24ம் திகதிவரை கனமழை..!

ஆசிரியர் - Editor I
இலங்கைக்கு தென் கிழக்கே தாழமுக்கம், வடக்கு கிழக்கு மாகாணங்களில் 24ம் திகதிவரை கனமழை..!

இலங்கைக்கு தென்கிழக்கே வங்களா விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. இது எதிர்வரும் 22.12.2022 அன்று நன்கமைந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது. 

இது எதிர்வரும் 23.12.2022 அல்லது 24.12.2022 அன்று இலங்கையின் மத்திய பகுதியினூடாக( தற்போதைய நிலையில்) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உண்மையில் இந்த தாழமுக்கத்தின் நகர்வு பாதை தொடர்பாக உறுதியாக எதனையும் தற்போது கூறமுடியாது. எனினும் தற்போதைய நிலையில் இது இலங்கையின் ஊடாகவே நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த தாழமுக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து கொண்டிருக்கும் மழை எதிர்வரும் 25.12.2022 வரை தொடரும் வாய்ப்புள்ளது. 

எனினும் 21.12.2022 முதல் 24.12.2022 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

எதிர்வரும் 22.12.2022 முதல் கரையோரப் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையான வேகத்தில் காற்று வீசும் வாய்ப்புள்ளது. அதேவேளை நேற்று முதல் புத்தளம் தொடக்கம் மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, 

மட்டக்களப்பு, தங்காலை, காலி மற்றும் மாத்தறை கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது. 

அதேவேளை நேற்று முதல் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மற்றும் தென் மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் நாளுக்கான அதிகூடிய வெப்பநிலை ( Maximum temperature) குறைவாக பதிவு செய்யப்படும் என்பதனால் குளிரான வானிலை சில நாட்களுக்கு தொடரும். 

நேற்றுவரை வடக்கு மாகாணத்தின் மேற்பரப்பு நீர்நிலைகளில் பலவற்றுக்கு அவற்றின் முழுக் கொள்ளளவின் 60வீதம் கூட நிரம்பவில்லை. வழமையாக இக்காலப்பகுதிக்குள் வான் பாய்ந்திருக்க வேண்டிய பல குளங்கள் இன்னமும் தங்கள் கொள்ளளவின் 70 வீதத்தைக் கூட எட்டவில்லை. 

இதே நிலை நீடித்தால் எதிர்வரும் சிறுபோக நெற்செய்கை கடுமையாகப் பாதிக்கப்படும். நேற்று(19.12.2022) நண்பகல் வரை வடமாகாணத்தின் பெருநிலப்பரப்பில் குளங்களின் கொள்ளளவைப் பொறுத்தவரை.......

1. இரணைமடு 28.5 அடி

2. முத்தையன்கட்டு 22.01 அடி

3. வவுனிக்குளம் 14 அடி

4. கட்டுக்கரைக்குளம் 11.3 அடி

5. கணுக்கணி 12.06 அடி

6. உடையார்கட்டு 23.05அடி

7. தண்ணிமுறிப்பு 18.07அடி

8. மாதவளசிங்கம் குளம் 16.06அடி

9. விசுவமடு 20.35அடி

10. அகத்திமுறிப்பு 7.5அடி

11. கல்மடு 25அடி

12. அக்கராயன் 9.06அடி

13. கரியாலை நாகபடுவான் 5.11அடி

14. புதுமுறிப்பு 18.11அடி என்ற வகையில் காணப்படுகின்றது. 

இவ்வாண்டு வடகீழ்ப் பருவக்காற்று மழைவீழ்ச்சியை பொறுத்தவரை 2023 ஜனவரி 20 வரை தொடர வாய்ப்புள்ளது. இக்காலப் பகுதியில் கிடைக்கின்ற மழைவீழ்ச்சியே எங்கள் மேற்பரப்பு நீர்நிலைகள் முழுக் கொள்ளளவை எட்ட உதவும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு