பாலியல் சீண்டலில் இருந்து தப்பிக்க மின்சார காலணி!! -பாடசாலை மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு-
இந்தியாவின் கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், பாலியல் வன்முறையில் இருந்து தப்பித்துச் செல்லும் வகையிலான மின்சார காலணியை கண்டுபிடித்துள்ளார்.
பெண்கள் மீது உடல் ரீதியாக நடத்தப்படும் பாலியல் வன்முறை போன்ற சம்பவங்களில் இருந்த தப்பித்துச் செல்ல, பத்தாம் வகுப்பு மாணவியான விஜயலட்சுமி பிரதார் மின்சார காலணி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
பேட்டரி பொருத்தப்பட்ட இந்த காலணியை அணிந்துகொண்டு நடக்கும்போது, மின்சாரம் உற்பத்தியாகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காலணியை அணிந்து செல்லும் நபர், பாலியல் வன்முறை போன்ற சம்பவங்களின்போது, குற்றச்செயல் புரியும் நபரை எட்டி உதைத்தால், காலணியில் இருந்து வெளிப்படும் மின்சாரத்தால் அவர் தாக்கப்படுவார்.
அதேபோல், இந்த காலணியில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால், லைவ் லொகேஷனையும் அறிந்து கொள்ளலாம். ஆபத்தான நேரத்தில் காலணியில் உள்ள பொத்தானை அழுத்தினால், ஒலி எழுப்பும் வகையிலும் இந்த கருவியை மாணவி கண்டுபிடித்துள்ளார். மாணவியின் இந்த கண்டுபிடிப்புக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.