சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்!! -தரிசன நேரம் அதிகரிப்பு-
சபரிமலை ஐயப்பன் கோவில் பூஜைக்காக கடந்த மாதம் 16 ஆம் திகதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 2 வருடங்களாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் இந்த வருடம் கட்டுப்பாடு நீக்கப்பட்டதால் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இதில் அதிகபட்சமாக கடந்த 9 ஆம் திகதி ஒரு இலட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் ஒரே நாளில் சபரிமலையில் குவிந்தனர். இதனால் மரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரை நீண்ட வரிசையில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கட்டுக்கடங்காத கூட்டம் சபரிமலைக்கு வருவதால் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வதில் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் என பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 67 ஆயிரம் பேர் தரிசனத்துக்காக முன்பதிவு செய்திருந்தனர். இதுபோக உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் திரண்டனர்.
இந்நிலையில் சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார். அதாவது வழக்கமாக இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். தற்போது கூடுதலாக ½ மணி நேரம் அதிகரிக்கப்பட்டு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என கூறினார்.
ஏற்கனவே தரிசன நேரம் 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் ½ மணி நேரம் கூடுதல் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதாவது 24 மணி நேரத்தில் 18½ மணி நேரம் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்.