எல்லை நிர்ணய குழுவிற்கு சாய்ந்தமருதில் இருந்து முன்மொழிவு.
எல்லை நிர்ணய குழுவிற்கு சாய்ந்தமருதில் இருந்து முன்மொழிவு.
பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், உள்ளுராட்சி நிறுவனங்களின் தொகுதிகளை வரையறுப்பதற்கான தேசிய எல்லை நிர்ணய குழுவிற்கு ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் பெற்றுக் குழுவிற்கு சாய்ந்தமருதின் உள்ளூராட்சி வட்டார எல்லைகளை மறுசீரமைப்பது தொடர்பான முன்மொழிவு சாய்ந்தமருதில் உள்ள 21 பொது நிறுவனங்கள் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்ட அறிவித்தல் குறித்து ஆராய்வதற்காக, கடந்த 2022.11.22ம் திகதி சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜூம்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபை, சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூடி தற்போது காணப்படும் வட்டாரங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது பாதுகாத்தல், புதிய வட்டாரங்களை உருவாக்குதல் உட்பட பல்வேறுபட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் பின்னர் மேற்படி முன்மொழிவு தயாரிக்கப்பட்டது.
சாய்ந்தமருதின் தற்போதைய சனத்தொகை, வாக்காளர் தொகை மற்றும் குடும்பங்களின் எண்ணிக்கை உட்பட பல்வேறு புள்ளிவிபர தகவல்களை உள்ளக்கிய குறித்த முன்மொழிவு 2022.12.03ம் திகதி தபாலிலும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவானது, பொது அமைப்புகள், புத்திஜீவிகள், சிவில் சமூக செயற்பாட்டார்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளடங்கிய குழுவினரால் முன்வைக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டது.
இவ்விடயத்தில் எவ்வித அரசியல் பின்னணிகளும் இருக்கவில்லை என்பதுடன், அரசினால் நியமிக்கப்பட்ட குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதை தவிர எந்தவொரு அரசியல்வாதிகளிடமும் இதுவரை இதன் பிரதிகள் கையளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கையளிக்கப்பட்டதாக கூறப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என முன்மொழிவு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட செயற்பாட்டாளர்களினால் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களின் அங்கத்தவர் தொகையை 4000 அளவில் குறைப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக, கௌரவ பிரதம மந்திரி மற்றும் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்களினால் மஹிந்த தேசப்பிரியவை தலைவராக கொண்ட எல்லை நிர்ணய குழுவிற்கு மேற்படி முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.