குஜராத் தேர்தலில் வரலாற்று வெற்றியை நோக்கி நகரும் பா.ஜ.க!! -அதிக இடங்களை இழந்த காங்கிரஸ்-

ஆசிரியர் - Editor II
குஜராத் தேர்தலில் வரலாற்று வெற்றியை நோக்கி நகரும் பா.ஜ.க!! -அதிக இடங்களை இழந்த காங்கிரஸ்-

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க 149 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் புதிதாக தேர்தல் களம் கண்ட ஆம் ஆத்மி 9 தொகுதிகளை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. 

மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு  தேர்தலுடன் ஒப்பிட்டால் பா.ஜ.க இம்முறை சுமார் 55 இடங்களைக் கூடுதலாக வசப்படுத்தியுள்ளது. 

காங்கிரஸ் கட்சி 50க்கும் மேற்பட்ட இடங்களை இழந்துள்ளது. சுமார் 9 தொகுதிகள் என்ற அளவில் ஆம் ஆத்மி தனது வெற்றிக் கணக்கை குஜராத் மண்ணில் ஆரம்பித்துள்ளது. 

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு ஆரம்பித்து எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்தப்படி ஆளும் பா.ஜ.கவுக்கு சாதகமாக முடிவுகள் சென்று கொண்டிருக்கிறது.

மொத்தம் 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த முதலாம் திகதியும் 2 ஆம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 5 ஆம் திகதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. 

குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க, 182 வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களும், 182 தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பா.ஜ.க அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆம் ஆத்மி கட்சி 181 தொகுதிகளில் போட்டியிட்டது. காங்கிரஸ் 179 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களில் போட்டியிட்டது. 

பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றே கூறியது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வெற்றி என்பது எங்களுக்குத் தெரியும், வரலாற்று வெற்றிக்காகவே காத்திருக்கிறோம் என்று கூறியிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது போல் குஜராத்தில் பா.ஜ.க வரலாற்று வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு