SuperTopAds

கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா (6th Convocation)

ஆசிரியர் - Editor III
கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா (6th Convocation)

கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா (6th Convocation) 


இன்ஷா அள்ளாஹ் ,

நாளை (2022.12.03) நடைபெறவுள்ளது.

வாழ்த்துக்கள்.

==============

நீர் வளமும் நில வளமும் செழித்தோங்கும் நெய்தல் நிலச்சோலையின் கண்ணே கிழக்கிலங்கையின் சீர்மிகு வளம் கொழிக்கும் அம்பாறை மாவட்டத்தில் அழகுறு வடிவாய் நனிந்திட வைக்கும் கல்முனை பதியினில் இஸ்லாமாபாத் தளம் கொண்டு தலை நிமிர்ந்து, தலை சிறந்து விளங்கும் அறிவாலயமே அல்-ஹாமியா அரபுக் கல்லூரியாகும். கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரி கலாபீடம் ஸ்தா பிக்கப்படும்போது இந்நாட்டில் சுமார் 75 அரபுக் கல்லூரிகளே காணப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை ஷர்கிய்யா அரபுக் கல்லூரி, சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி என்பனவற்றுக்கு அடுத்தபடியாக 1979.12.07 ஆம் திகதி உருவாக்கப்பட்ட மிகப்பிரசித்தி பெற்ற மூன்றாவது அரபுக் கல்லூரியாக கல்முனை அல்- ஹாமியா அரபுக் கல்லூரி விளங்குகின்றது.

அல்-ஹாமியா அரபுக் கல்லூரி ஹிமாயதுல் இஸ்லாம் இயக்கத்தின் கீழ் இயங்கி வருகின்றது. இது 1979 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட உன்னத நோக்கம் கொண்ட ஓர் அமைப்பாகும். கல்முனைப் பிரதேசத்தில் புரையோடிப் போயிருந்த மார்க்கத்தின் பெயரிலான மூட நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் களைந்து தூய இஸ்லாத்தின் அடிப்படையில் அல் குர்ஆன், அல் ஹதீஸின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப வாழத்தக்க ஓர் சமுதாயத்தை உருவாக்குவதையும், கறையற்ற தூய இஸ்லாத்தை முன்னெடுப்பதையும் நோக்காகக் கொண்டு கல்முனைப் பிரதேசத்திலுள்ள பெருமனமும், தெளிந்த இஸ்லாமிய அறிவும் படைத்த கணிசமான ஒரு தொகை ஆலிம்களும் பெருமக்களும் ஒன்று சேர்ந்து இவ்வியக்கத்தை உருவாக்கினர்.

இவ்வியக்கத்தை உருவாக்குவதில் மூல வேராக இருந்து உழைத்தவர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். ஸாஹிப் - றஹ் (கபூரி, நத்வி) ஆவார். அவருக்கு பக்கத் துணையாக டொக்டர் ஏ.எல்.எம். ஜமீல் - றஹ் (MBBS Ceylon, Rcog – London, MRCOG – UK) செயற்பட்டார். ஹிமாயதுல் இஸ்லாம் இயக்கத்தின் முதலாவது தலைவராக மர்ஹும் மௌலவி பாஸில் எஸ்.எம். முஸ்தபா மௌலானாவும், இணைச் செயலாளர்களாக மர்ஹும்களான ஏ.எல். இப்றாலெப்பை (ஹாபிழ்), எஸ். யூசுப்லெப்பை (கபூரி) ஆகியோரும் பொருளாளராக எம்.ஐ.உசைனும் நியமிக்கப்பட்டனர்.

கல்முனை ஹிமாயதுல் இஸ்லாம் இயக்கத்தின் முன்னாள் பொருளாளர் மர்ஹூம் ஏ.எல்.ஏ. கரீமின் இல்லத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டின் போது இஸ்லாமிய மூலாதாரங்களுடன் கூடிய தூய இஸ்லாமிய அறிவையும் காலத்தேவைக்கேற்ற பல துறைக் கல்விகளையும் கற்றுத்தேறிய ஆலிம்கள் குழுவொன்றை உருவாக்க வேண்டுமென்று ஏகமனதான முடிவு எட்டப்பட்டது. பின்னர் குறித்த இயக்கம் புனரமைக்கப்பட்டு பின்வருவோர் அதன் ஆளுநர்களாக தெரிவு செய்யப்பட்டனர். தலைவராக மர்ஹும் டொக்டர் ஏ.எல்.எம். ஜமீலும் (MBBS Ceylon, Reog – London, MRCOG – UK), செயலாளராக மர்ஹும் அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். ஸாஹிப் (கபூரி, நத்வி) வும், பொருளாளராக மர்ஹும் எம்.ஐ.எம். காசிம் முதலாளியும் ஆலோசகராக மர்ஹும் எம்.ஏ.எம். ஹுசைனும் (முன்னாள் மாவட்ட நீதிபதி) ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதோடு மர்ஹும்களான எஸ். உதுமாலெப்பை, யூ.எஸ்.ஏ. ஹமீத், யூ.எஸ். முஹம்மத், ஏ.எல்.ஏ. கரீம், மௌலவிகளான எம்.ஐ.எம். முபாறக், (பாரி), மர்ஹும்களான ஏ.எல். இப்றாலெப்பை (ஹாபிழ்), எஸ். யூசுப்லெப்பை (கபூரி), எஸ்.எம். முஸ்தபா மௌலானா, எம்.எம். இப்றாலெப்பை (தேவ்பந்த்) ஆகியோர் உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர். மேற்கூறப்பட்டவர்கள் உள்ளடங்கலாக 37 பேரை ஸ்தாபக அங்கத்தவர்களாகக் கொண்டு ஹிமாயதுல் இஸ்லாம் இயக்கமும் அதன் கீழ் இயங்கும் அல்-ஹாமியா அரபுக் கல்லூரியும் 1992 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க பாராளுமன்ற கூட்டிணைப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது விடயத்தில் துரித நடவடிக்கை எடுத்து பதிவு செய்து கொடுத்த பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் (பா.உ, எல்.எல்.எம்) அவர்களைச்சாரும். ஏழு ஏக்கர் பரந்த நிலப்பரப்பில் இரம்யமான சூழலில் இயங்கி வரும் கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரி, ஸ்தாபிக்கப்பட்ட காலம்தொட்டு நவீன காலப் போக்குகளை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களை வடிவமைத்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இங்கு இஸ்லாமிய ஷரீஆத்துறையும், பாடசாலை கலைத்திட்ட பாடங்களும் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

க.பொ.த சா/த, க.பொ.த உ/த, பரீட்சைகளுக்குரிய பாடங்களைக் கற்பிப்பதற்கு திறமையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகின்றன. இதேவேளை தொழில் கல்வி தாரதரப்பத்திரத்தை பெறுவதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் கல்லூரியின் கலைத்திட்டத்தில் தொழில் கல்வி பாடநெறியினை இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு 43 வருடங்களாகின்றன. ஷரீஆ துறையில் இது வரை 37 தொகுதிகளை உள்ளடக்கிய 333 உலமாக்கள் மௌலவிப்பட்டம் பெற்று வெளியாகியுள்ளனர். இவர்களது ஆன்மீக, சமய, சமூக, கல்வி ரீதியான பணிகள் இலங்கையின் அனைத்து பாகங்களிலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கல்லூரியில் அல்குர்ஆன் மனனப்பிரிவு 2013ஆம் ஆண்டு முதல் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றது. அண்மைக்காலத்தில் அது ஆரம்பிக்கப்பட்டதாயினும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் நவீன உத்திகளாலும், நுணுக்கமான பயிற்றுவிப்பு முறையினாலும் இதுவரையில் 27 மாணவர்கள் அல்குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ளனர். நாளை (2022.12.03) சனிக்கிழமை கல்லூரியின் வளாகத்தில் இடம்பெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் 23 ஹாபிழ்களும், 105 மௌலவிகளும் பட்டம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியாகிய உலமாக்கள் நாட்டின் நாலா பக்கமும் இறைவனின் துணையுடன் சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்விக் கல்லூரிகளில் பாடத்துறை தலைவர்களாகவும், சிரேஷ்ட விரிவுரையாளர்களாகவும் கடமையாற்றுகின்றனர். அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். சலீம் (ஹாமி) இலங்கையின் முதலாவது அரபுத்துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். சிலர் வலயக் கல்வி மட்டத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களாகவும் மற்றும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களாகவும் தொழிலாற்றுகின்றனர்.

அல்-ஹாமியா அரபுக் கல்லூரியில் கல்வி பயின்று மௌலவி பட்டத்தை முடித்த பின்னர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பட்டம் பெற்ற மற்றும் பட்டம் பெறாத பலர் பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றனர். இன்னும் சிலர் அரபுக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும் கடமையாற்றுகின்றனர். அதேபோன்று ஐரோப்பா, அரபு நாடுகளில் மிக உயர்ந்த சம்பளத்தில் தொழில் புரிந்து வருவோரும் உள்ளனர். அரசின் கீழ் கல்வித்துறை அல்லாத வேறு தொழில்களிலும் கணிசமானவர்கள் தொழில் புரிகின்றனர். இவர்கள் யாவரும் அல்குர்ஆன், ஸுன்னாவின் வழிகாட்டலை அடியொற்றி இஸ்லாமிய பிரசார பணியில் நடுநிலை நின்று நிதானமாகப் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியில் ஷரீஆ கற்கைத் துறையில் 135 மாணவர்களும், ஹிப்ழ் பிரிவில் 25 மாணவர்களும் பயின்று வருகின்றனர்.

இங்கு கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்காகவும் ஏனைய தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் தேவையான பௌதீக வளங்கள் போதுமான அளவில் காணப்படுகின்றன.

இந்த வகையில் 03 மாடிகள் கொண்ட வகுப்பறைக் கட்டடம், அல்குர்ஆன் மனனப்பிரிவு மாணவர்களுக்கு பிரத்தியேகமான வகுப்பறை மற்றும் தங்குமிட வசதி, வாசிகசாலை, பள்ளிவாசல், கணினி அறை, கூட்ட மண்டபம், ஆளுநர் சபை நிருவாக அறை, பழைய மாணவர் சங்க காரியாலயம், அதிபர் அறை, விளையாட்டு மைதானம் என பல்வேறு வசதிகள் இங்கு காணப்படுகின்றன.

தற்போது ஹிமாயத்துல் இஸ்லாம் இயக்கத்தின் தலைவராக சட்டத்தரணி ஆரிப் ஷம்சுத்தீன் செயற்பட்டு வருகின்றார். அவருக்கு முன்னர் இவ்வியக்கத்தின் ஆயுட்காலத் தலைவராக மர்ஹூம் டொக்டர்.ஏ.எல்.எம். ஜமீல் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது சட்டத்தரணி ஆரிப் ஷம்சுத்தீனின் தலைமையின் கீழ் 20 பேர் கொண்ட ஆளுநர் சபை இயங்கி வருகின்றது. இந்த ஹிமாயதுல் இஸ்லாம் இயக்கத்தினால் நிருவகிக்கப்படும் அல்ஹாமியா அரபுக் கல்லூரியின் அதிபர்களாக அஷ்ஷெய்க் மர்ஹூம்களான எஸ்.எம். முஸ்தபா மௌலானா, அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். சாஹிப் மற்றும் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி), அஷ்ஷெய்க் யூ.எல்.ஏ. கபூர் (பலாஹி) ஆகியோர் பதவி வகித்துள்ளனர்.

தற்போது அக்கல்லூரியின் அதிபராக அஷ்ஷெய்க் ஏ.சீ. தஸ்தீக் (ஹாமி, மதனி) செயற்படுகின்றார். அவரது முகாமைத்துவத்தின் கீழ் 22 கல்விசார் உத்தியோகத்தர்களும், 05 கல்விசாரா பணியாளர்களும் கடமையாற்றுகின்றனர். அத்துடன் ஷரீஆ பிரிவு மாணவர்கள், ஹிப்ழ் பிரிவு மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் முகாமைத்தும் செய்து வழி நடாத்துவதும், அவர்களது தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதும் இலகுவான காரியமல்ல. மாணவர்களிடமிருந்து மாதாந்தம் ஒரு சிறுதொகைப் பணமே அறவிடப்படுகின்றது. கல்லூரி ஆளுநர் சபை பாரியளவிலான துண்டு விழும் தொகையைப் பொறுப்பேற்று நடாத்துகின்றது. இதற்கு பரோபகாரிகளினால் வக்பு செய்யப்பட்ட நெற்காணிகள், கட்டட மற்றும் நில வாடகை என்பன பெரும் பங்களிப்பாகவும், உறுதுணையாகவும் அமைந்துள்ளன. அத்தோடு மாதாந்த சந்தாக்காரர்களினதும் றமழான் மாத விஷேட நன்கொடையாளர்களினதும் பங்களிப்பு சிறப்பாக கைகொடுத்து உதவுகின்றன.

மேலும் 333 அங்கத்தவர்களைக் கொண்டு இயங்கும் மஜ்லிஸுல் ஹுமாத் எனும் பழைய மாணவர் சங்கமும் அவ்வப்போது கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் ஏனைய உதவிகளையும் வழங்குவதில் கல்லூரியின் ஆளுநர் சபைக்கு பக்கபலமாக இருந்து வருகின்றது. வக்பு சொத்துக்கள் மற்றும் தர்மம் மூலமும் சிந்தனை ரீதியான, சரீர ரீதியான உதவிகள் மூலமும் இக்கல்லூரியின் கல்விப் பணியை முன்னெடுப்பதற்கு ஒத்துழைத்து வருகின்ற அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரியவும் சொத்திலும் சுகத்திலும் பறக்கத் செய்யவும் ஈருலகப் பேற்றை நல்கவும் பிரார்த்திக்கின்றோம்.

நன்றி.

அஷ் ஷெய்க். ஏ. எல். நாஸீர் கனி (விரிவுரையாளர்)

கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா (6th Convocation)