மாவீரர் பட்டியலில் கஜேந்திரர்களின் இடைச்செருகலுக்கு இடமில்லை!
தமிழீழ மாவீரர் பணிமனையினால் வெளியிடப்பட்ட மாவீரர் பட்டியலில் உள்ளோரையும், 2009 மே 15 இற்கு பின்னர் வெளியுலகத்துக்குத் தகவல் தெரிவிக்க முடியாத களச்சூழலில் வீரச்சாவடைந்த புலிகள் இயக்கப் போராளிகளையும் தவிர வேறெவரையும் இடைச்செருகலாக இணைத்து மாவீரர்களின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என மாவீரர் அறிவிழியின் தந்தையான முத்துக்குமார் மனோகர் ஆகிய நான் சகல தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன் என ஊடகங்களுக்கு அனுப்பிய செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும், அப்படி வேறு யாரையாவது நினைவுகூர வேண்டுமென வலியுறுத்தும் தரப்புகள் தங்கள் கட்சியின் நிறுவனர்களின் நினைவு நாளிலோ, பிறந்தநாளிலோ தனியாக நினைவு கூருவதற்கு உள்ள உரிமை பற்றி எவரும் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டார்கள் எனக் கருதுகிறேன்.
தங்கள் கட்சியின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடலின் முடிவில் ஏகமனதாகத் தாங்கள் எடுத்த முடிவு குறித்து சைக்கிள் சின்னத்துடன் தேர்தல் ஆணையத்தில் அகில இலங்கைத்தமிழ் காங்கிரஸ் கட்சி என்று தம்மை அடையாளப்படுத்தும் தரப்பின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவிக்கும் கருத்துக்களை காணொலி மூலம் அண்மைய நாட்களில் காணக்கூடியதாக இருந்தது. இதில் ஏனைய தரப்பினர் அனைவரையும் மாவீரர் நாளில் நினைவுகூர வேண்டுமென தாங்கள் முடிவெடுத்திருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
உலகில் ஒழுக்கத்திற்கு உதாரணமான அமைப்பாகக் குறிப்பிடப்படுவது விடுதலைப் புலிகளைத்தான். புகைத்தல் உட்பட போதைப்பொருள் பாவனை, மது போன்ற விடயங்களில் கண்டிப்பாக இருப்பது புலிகளின் வரலாறு. அவர்களின் ஒழுக்கம், தலைமைக்குக் கட்டுப்படல் போன்ற விடயங்கள் உலகறிந்தது. அவ்வாறு இருக்கையில் ஏனையவர்களை இந்தப் பட்டியலில் இணைக்க முயல்வது விடுதலைப் போராட்டத்தின் அரிச்சுவடியைக்கூட இவர்கள் கற்க முனையவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.
புலிகளைத் தவிர ஈரோஸ் இயக்கத்தவர் 266 பேரும், தனிக்குழுவாக பத்துப்பேரும் தமிழீழ மாவீரர் பணிமனையின் மாவீரர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தனிக்குழுவில் பொன்.சிவகுமாரன் (05/06/1974) யாழ், பெஞ்சமின் (01/01/1981) மட்டக்களப்பு, தங்கத்துரை (நடராசா தங்கவேல்-தொண்டைமானாறு, யாழ்) (25/07/1983), குட்டிமணி (செல்வராசா யோகச்சந்திரன். வல்வெட்டித்துறை) (25/07/1983), கணேசானந்தன் ஜெகநாதன் (தொண்டமானாறு.யாழ் (25/07/ 1983), செனட்டர் (வைத்தியலிங்கம் நடேசதாசன், வல்வெட்டித்துறை (25/07/1983), தேவன் / வெள்ளைமாமா (செல்லத்துரை சிவசுப்பிரமணியம் - அச்சுவேலி யாழ்) (25/07/1983), சிவபாதம் மாஸ்டர் (நவரத்தினம் சிவபாதம் பத்தைமேனி அச்சுவேலி யாழ்) (25/07/1983) , சிறிகுமார் (முத்துக்குமார் சிவகுமார் உரும்பிராய் கிழக்கு யாழ்) (27/07/1983), ஜெகன்/நிசான் ( நடராசா ஜெகதீசன் , சங்கரத்தை, வட்டுக்கோட்டை, யாழ்.) (09/09/1984) ஆகியோரே இந்தப் பத்து மாவீரரும் ஆவார்.
செருப்புக்கு அளவாக காலை வெட்ட வேண்டும் என்ற பாணியில் கஜேந்திரகுமார் சொல்லும் விடயங்களின் உள்நோக்கத்தைப் பார்த்தால் பதின்மூன்றாவது சட்டதிருத்தத்திற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டுள்ள இயக்கங்கள் - கட்சிகளுக்கு நேசக்கரம் நீட்டுவதை உணர முடிகிறது.
தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கும் சூழல் அன்றைய கால அரசியல் நிலைமைகளினால் உருவானது. போராட்ட ஆதரவாளர் குடும்பங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், கூட்டுப்பாலியல் வல்லுறவும் கொலையும் என எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான் தமிழ்த்தரப்பின் ஐக்கியத்திற்காக உச்சக்கட்ட விட்டுக்கொடுப்புடன் நடந்து கொண்டார். அதற்காக மாவீரர் பட்டியலில் அவர்களை இணைக்கத் தயாராக இருக்கவில்லை. எமது பட்டியலில் உள்ள பலரை மாவீரர் ஆக்கியதே இவர்கள்தான் என்று தெரிந்து கொண்டும் இம்முயற்சியில் இறங்கினார். எனினும், இரு இயக்கங்களிலும் தலா ஒவ்வொருவரை எக்காலத்திலும் இவர்களின் இயக்கங்களில் மீண்டும் இணைக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.
2009இற்கு பின்னரான சூழலில் அவர்களை மீண்டும் தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டன அந்த இயக்கங்கள். 2004 தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் 22 பேர் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகினர். இவர்கள் தலைவரைச் சந்தித்தனர். அவ்வேளை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரான அரியநேத்திரன் கருணாவின் பிளவின்போது அந்தத் தரப்பிலிருந்து வெளியேற முடியாத நிலையிலிருந்த போராளிகள் பின்னர் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டனர் இவர்களையும் மாவீரர் பட்டியலில் இணைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இந்த 22 பேரிலும் தானே இயக்கத்தின் அதி விசுவாசியென காட்ட முந்திரிக் கொட்டைத்தனமாகச் செயற்பட்டார் கஜேந்திரன். இயக்கத்தைப் பொறுத்தவரை யார் யாரை மாவீரர் பட்டியலில் இணைப்பது ,இணைக்கக்கூடாது என்று நீங்கள் சொல்லக்கூடாது என்றார்.
இத்தனை வருட போராட்ட வாழ்வில் எத்தனை அதி விசுவாச நடிகர்களை அரசியலில் சந்தித்திருப்பார் தலைவர். அவர் உடனே இவர்(அரியநேத்திரன்) அந்த மக்களின் பிரதிநிதி. தன்னுடைய மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கிறார் இவர். இம்மோதலில் உயிரிழந்தவர்கள் ஏற்கெனவே எம்முடன் இருந்து விசுவாசமாகச் செயற்பட்டவர்கள்தானே என்று சொல்லி கஜேந்திரன் தன்னுடைய அளவை தான் புரிந்துகொள்ள வேண்டும். என்று மறைமுகமாக உணர்த்தினார். அப்படியிருந்தும் காணிக்கு பின்னுரித்து போட்டு எழுதுவதுபோல மாவீரர் தொடர்பான விடயங்களை முடிவெடுக்கும் ஏகபோக அதிகாரத்தைத் தலைவர் தந்துவிட்டுப் போயிருப்பதாக உணர்த்த முனைகின்றனர். தரவை உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் குழுக்களை அலட்சியப்படுத்தி தன்னிச்சையாக முடிவெடுக்கின்றனர்.
எந்த இலட்சியத்திற்காக இந்த மண்ணில் மாவீரர்களானார்களோ அவர்களது ஆன்மாவைக் கொச்சைப்படுத்தும் முயற்சிகளை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் கைவிட வேண்டும். முதலில் வேறு எந்த இயக்கத்தில் இருந்து உயிரிழந்தவர்களின் பெற்றோரைக் கூட்டிக் கொண்டு வந்து முதன்மைச் சுடரேற்ற வைத்தாலும் வைப்பார்கள். இவர்களின் மறுபக்கத்தை தாயகத்தில் உள்ளோர் மட்டுமல்லாது புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும் புரிந்து கொள்ள வேண்டும். எந்தக் காலத்திலும் தங்கள் பெயர் மாவீரர் பட்டியலில் இடம்பெறாது எனத் தெரிந்து கொண்டும் தம்முயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களுமிருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த மண்ணில் அரசியல் இலாபத்துக்காக இக்கட்சியினர் செய்யும் கோளாறுகளை நிறுத்த ஒவ்வொருவரும் தங்களாலான முயற்சிகளைச் செய்யவேண்டும் என்றுள்ளது.