தமிழ் தரப்பினரை ரணில் பேச்சுக்கு அழைப்பது ஒரு நாடகம்!
இலங்கையில் சமஷ்டியாட்சி முறையை ஏற்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என 2021 இல் கூறிய ரணில் விக்கிரமசிங்க தற்போது இனப் பிரச்சினை தீர்வுக்கு காண்பதாக கூறி, தமிழ் தரப்பினரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது ஓர் நாடகமாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வவொன்றை எட்டுவதற்காக வட கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே மேசையில் அமர்ந்து, பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமையன்று பாராளுமன்றில் வைத்து அழைப்பொன்றை விடுத்திருந்தார்.
ஐ.தே.க. சார்பில் தேசிய பட்டியல் ஊடாக கிடைத்த ஒரேயொரு ஆசனத்தை பெற்று பாராளுமன்றம் வந்திருந்தபோது, இலங்கையில் சமஷ்டியாட்சியை ஏற்படுத்துவது நடைமுறைக்கு சாத்திமில்லை என அப்போது ரணில் விக்கிரமசிங்க என்னிடம் தெரிவித்திருந்தார். நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு, சர்வதேசத்திடமிருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவு வழங்குகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்துவதற்காக, நல்லாட்சி அரசாங்கத்திடம் பேரம் பேசக்கூடிய மக்கள் ஆணையை எமக்கு பெற்றுத் தாருங்கள் என வட கிழக்கு தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அந்த ஆணைக்கு மாறாக ஒற்றையாட்சிக்கு இணங்கிருந்தனர்.
அன்று இறுதி சந்தர்ப்பமொன்றை வழங்குமாறு வட கிழக்கு மக்களிடம் வாக்குகளை கேட்டுக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர், எந்தவித பேரமும் பேசாமல் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளமை அன்று போலவே இன்றும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற செயலாகும்.
கடந்த வருடம் நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக, சர்வதேசத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறான நிகழ்ச்சி நிரல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆகவே, இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறி, வட கிழக்கு தமிழ் தரப்பினரை அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு, நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த போவதாக கூற முற்படுகின்றமை சர்வதேசத்தை ஏமாற்றுகின்ற ஓர் செயலாகவே நாம் பார்க்கின்றோம்.
இலங்கை தீவில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய இன நல்லிணக்கத்திற்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுவதற்கு சமஷ்டியை ஒரே வழியாகும் " என்றார்.
ஒற்றையாட்சி முறையை இல்லாதொழித்து சமஷ்டியாட்சி முறையை ஏற்படுத்த தயார் என்பதை தமிழ் ,சிங்கள மக்கள் அனைவரிடமும் பகிரங்கமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூற வேண்டும்.
அவ்வாறு கூறும் பட்சத்தில், இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது குறித்து பரிசீலனை செய்வதாக பாராளுமன்ற உறுப்பினரான கஜேதந்திர குமார் பொன்னம்பலம் வலிறுத்திக் கூறினார்.