SuperTopAds

பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டம் இன்றும் தொடரும் – கூட்டமைப்பு

ஆசிரியர் - Admin
பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டம் இன்றும் தொடரும் – கூட்டமைப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்கள் இன்றும் நாளையும் தொடர்ந்து இடம்பெறும் என்று தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலர் துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமாகி நடந்த பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டத்தின் முடிவிலேயே அவர் இதனைக் கூறினார்.

புதிய உள்ளூராட்சித் தேர்தல் முறையின்படி, வட்டார அடிப்படையில் செல்வாக்குடையவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே, தேர்தல் வியூகம் வகுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக நேற்று பேசப்பட்டதாகவும், ரெலோவின் உயர்மட்டக் கூட்டத்தில் அந்தக் கட்சியினர் பங்கேற்கச் செல்ல வேண்டியுள்ளதால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மீண்டும் இன்றும் நாளையும் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டத்தை நடத்தி, இன்னும் இரண்டு நாட்களுக்குள் முடிவை அறிவிப்போம் என்றும் துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

நேற்றைய கூட்டத்தில் குழப்பங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.