யாழ்.பருத்தித்தீவு கடலட்டை பண்ணையில் சீன இராணுவமா? அமைச்சர் டக்ளஸ் பதில்..
யாழ்.பருத்தித்தீவில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணையில் சீன இராணுவத்தினர் இருப்பதாகவும் அதனால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் எனவும் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. அந்த பண்ணைக்கும் சீனர்களுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது.
என்னை பொறுத்தளவில் சீனாவா? இந்தியாவா? என்ற கேள்வி என்னை நோக்கி எழுப்பபடுமாக இருந்தால் நான் இந்தியா என்றே சொல்வேன். யாழ்.அரியாலைக்கு நல்லாட்சி காலத்தில் வந்த சீனர்கள் தவிர்ந்த வேறு சீனர்கள் கிடையாது. மேற்கண்டவாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் அல்ல. மக்களின் எதிர்காலத்துக்கு எது சரியோ அதை முன்பே திட்டமிட்டு பலவற்றை நிறைவேற்றியுள்ளதோடு இன்னும் நிறைவேற்றுவேன். கடலட்டை பண்ணைகள் தொடர்பில் சிலர் அறிந்து பேசுகிறார்களோ அல்லது அறிந்தும் அறியாதவர்கள் போல் பேசுகிறார்களோ என எனக்குத் தெரியாது.
வடமாகாணத்தில் சுமார் 5000 ஏக்கரில் கடல் அட்டை பண்ணைகளை விரிவுபடுத்த ஏற்கனவே திட்டங்கள் தீட்டப்பப்பட்டுள்ள நிலையில் சுமார் 1150 ஏக்கரில் கடலட்டைப் பண்ணைகள் செயல்படுத்தப்படுகின்றன. நான் அமைச்சராக வர முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 பண்ணைகளும், யாழ் மாவட்டத்தில் 11 பண்ணைகளும்
மன்னார் மாவட்டத்தில் 3 பண்ணைகளுமாக 32 பண்ணைகள் காணப்பட்டன. நான் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் 277 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் மேலும்163 பண்ணைகள் அமைக்கப்பட உள்ளது.
யாழ்.மாவட்டத்தில் 245 பண்னைகள் அமைக்கப்பட்டதுடன் மேலும் 176 பண்ணைகள் அமைக்கப்படவுள்ளதோடு மன்னார் மாவட்டத்தில் 78 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் இன்னும் பண்ணைகள் அமைக்கப்பட உள்ளன.
பருத்தித்தீவு கடல் அட்டை பண்ணையில் சீன இராணுவத்தினர் இருப்பதாகவும் இதனால் இந்தியா தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அந்தப் பண்ணைகளுக்கும் சீனர்களுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை.
நல்லாட்சி அரசாங்கத்தில் அரியாலையில் உள்ள கடல் அட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையத்தில் ஏற்கனவே சீனர்கள் வந்தார்கள். அங்கு இருக்கின்ற சீனர்களை தவிர வேறு யாரும் இதுவரை கடலட்டை பண்ணை செயற்பாடுகளில் வடக்கில் ஈடுபடவில்லை. நாரா நிறுவனம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் போன்றவற்றினால் ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளில்
தழுவல் அடிப்படையில் கடலட்டை பண்ணைகள் அமைக்கப்படுகின்றன. அதற்கான அனுமதிகளை உரிய ஒழுங்கு முறைகளில் பெற்றுக்கொள்வதற்கு தேவையான காலத்தை, வீண் விரயமாக்க கூடாது என்பதனாலேயே தழுவல் முறையில் வழங்கப்படுகின்றன.
ஏனினும், தன்னிச்சையாக யாராவது அனுமதிகள் இன்றி கடலட்டை பண்ணைகளை அமைப்பார்களாயின் அவை அகற்றப்படும். தற்போது உருவாக்கப்பட்டுள்ள பண்ணைகளில் 95 வீதமானவை அந்தந்தப் பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களினாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், இந்தியா, சீனா போன்ற நாடுகள் கடலட்டை பண்ணைகளில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் செலுத்தி வருகின்றன. அவ்வாறு, என்னை அணுகியவர்களிடம் வருடாந்தம் இரண்டரை கோடி கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்து எமக்கு வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளேன்.
அவர்கள் யாராக இருந்தாலும், எமது மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றும் பட்சத்திலேயே அடுத்த கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்படும். என்னை பொறுத்தவரையில் இந்தியாவா சீனாவா என்ற வினா எழுப்பப் படுமானால் இந்தியாவே என கூறிக் கொள்வதோடு கடல் சார்ந்து மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் விரைவாகவும் வினைதிறனாகவும் செயல்படுத்தப்படும்.
என அவர் மேலும் தெரிவித்தார்.