கூலிப்படைக்கு 8 இலட்சம் ரூபா கொடுத்து மகனை கொலை செய்த பெற்றோர்!! -காட்டிக்கொடுத்த கார்-
ஹைதராபாத்தில் மதுபோதையில் தம்மை துன்புறுத்திய காரணத்திற்காக ஒரே மகனை கூலிப்படைக்கு 8 இலட்சம் ரூபா கொடுத்து பெற்றோர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கொலை சம்பவத்தில் அவர்கள் பயன்படுத்திய காரே கொலையாளிகளை காட்டிக் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுது;து மகனைக் கொலை செய்த குற்றத்துக்காக தெலங்கானாவின் கம்மம் பகுதியைச் சேர்ந்த அரச பாடசாலையின் தலைமை ஆசிரியர் காஷ்ட்ரியா ராம் சிங், மனைவி ராணி பாய் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கூலிப் படையைச் சேர்ந்த நான்கு பேர் கைதாகியுள்ளனர். ஒருவர் தலைமறைவாகியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மதுவிற்கு அடிமையாகி, நாள்தோறும் குடித்துவிட்டு தங்களைத் துன்புறுத்தி வந்த 26 வயது சாய் ராம் என்ற மகனை திருத்த வழி தெரியாமல், அவரைத் தீர்த்துக்கட்டுவது என்று முடிவெடுத்துள்ளனர் பெற்றோர்.
ஒக்டோபர் 18 ஆம் திகதி சூர்யபெட் பகுதியில், சாய் ராம் கொலை செய்யப்பட்டு, வீதியோரம் வீசப்பட்டார். மறுநாள் பொலிஸார் சடலத்தை கண்டெடுத்து குடும்பத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த பகுதியில், குற்றவாளிகள் பயன்படுத்திய கார் கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்துக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. பெற்றோர் மகனைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்தாகவும், மகனின் உடலை அடையாளம் காண, குற்றவாளிகள் பயன்படுத்திய அதேக் காரில் பெற்றோர் வந்ததும் பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவர்களிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். கூலிப் படையினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.