நேருக்கு நேர் போட்டியிட வருமாறு பஷிலுக்கு சஜித் சவால்!

ஆசிரியர் - Admin
நேருக்கு நேர் போட்டியிட வருமாறு பஷிலுக்கு சஜித் சவால்!

பஷில் ராஜபக்ஷ தனது இரட்டைக் குடியுரிமையை நீக்கிக் கொண்டு மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இரட்டை குடியுரிமையை நீக்கி , ஜனநாயக முறைமைக்குள் நேருக்கு நேர் அமைதியான அரசியல் போட்டிக்கு வருமாறு பஷில் ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.     

கொழும்பு மாவட்ட மக்கள் மாத்திரமல்ல , அனைத்து மாவட்ட மக்களும் அவருக்கு சிறந்த பாடத்தை புகட்டுவதற்கு காத்திருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாம் ஒருபோதும் 69 இலட்சம் மக்களையும் , 56 இலட்சம் மக்களையும் , ஏனையவர்களையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் வெற்றி பெறும் போது , 220 இலட்சம் மக்களும் வெற்றி பெறுவர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏன் பிரதமர் பதவியை ஏற்கவில்லை என்று பெரும்பாலானோர் என்னிடம் கேள்வியெழுப்பிக் கொண்டிருந்தனர்.

நான் அவ்வாறு செய்திருந்தால் இன்று ராஜபக்ஷ துதி பாடிக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை எனக்கும் ஏற்பட்டிருக்கும். எமக்கு கொள்கையொன்று உள்ளது. நாம் சிறந்தவற்றை ஆதரிக்கும் அதே வேளை , பாதகமான விடயங்களுக்கு நேரடியாக எதிர்ப்பினையும் வெளிப்படுத்துவோம்.

தற்போது அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தினை வெற்றி கொண்டுள்ளதாகவும், அரசாங்கத்திற்கு 170 ஆசனங்கள் காணப்படுவதாகவும் பெருமிதம் பேசிக் கொண்டிருக்கின்றனர். எமது அணியினர் வாக்களித்திருக்காவிட்டால் 22 ஐ நிறைவேற்றியிருக்க முடியாது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இரட்டை குடியுரிமையை நீக்கிக் கொண்டு பஷில் ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இரட்டை குடியுரிமையை நீக்கி , ஜனநாயக முறைமைக்குள் நேருக்கு நேர் அமைதியான அரசியல் போட்டிக்கு வருமாறு பஷில் ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கின்றேன். முடிந்தால் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுமாறு அவருக்கு சவால் விடுக்கின்றேன்.

கொழும்பு மாவட்ட மக்கள் மாத்திரமல்ல. 25 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் பஷில் ராஜபக்ஷவிற்கு சிறந்த பாடத்தைப் புகட்டவே காத்திருக்கின்றனர். 7 மூளைக்காரரான பஷில் ராஜபக்ஷவே நாட்டை சீரழித்தார். அவரே நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றார் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு