SuperTopAds

கிளிநொச்சி மாவட்டத்தில் 9971 குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிப்பு!

ஆசிரியர் - Admin
கிளிநொச்சி மாவட்டத்தில் 9971 குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் 9971 குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 784 கர்ப்பிணிகளும், 576 ஐந்து வயதிக்குட்பட்ட சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிராமிய பொருளாதார புத்தெழுச்சி மையங்களை வலுவூட்டும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழான மாவட்ட மட்ட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட ரீதியில் உணவு உற்பத்திக்கான பல்வேறு நிகழ்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக உணவு பற்றாக்குறை அல்லது உணவு பாதுகாப்பின்றி இருக்கின்ற சூழ்நிலைகளை இனங்கண்டு அடையாளப்படுத்தி அவ்விதமான சூழல்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது

பிரதேச செயலக ரீதியாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 9 ஆயிரத்து 971 குடும்பங்கள் உணவு பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ள அதே நேரம் 576 வரையான ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வறுமையின் காரணமாக 784 கர்ப்பிணித் தாய்மார்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என தெரிவித்த அரசாங்க அதிபர்

பாதிப்புற்றுள்ளவர்களுக்கான தீர்வினை வழங்குகின்ற வகையில் மாவட்ட மட்ட குழுவுக்கும் சம்மந்தப்பட்ட கிராமிய குழுவுக்கும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயங்களில் இருந்து மக்களை பாதுகாக்க அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்.

அதற்கமைய குறிப்பாக வீட்டுத் தோட்டங்களை உருவாக்குதல் உணவு உற்பத்திகளை ஊக்கப்படுத்துதல் உணவு உற்பத்தியாளர்களிடமிருந்து உணவைப்பெற்று பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்குதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக அதிகாரிகள்,பிரதேசசெயலாளர்கள்,சம்மந்தப்பட்ட துறை சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.