ரிஷி சுனக்கின் பிரதமர் கனவு நிறைவேறுமா?
பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் தமது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பிரதமராக முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக் கருத்துக்கணிப்புகளில் முந்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெறும் 44 நாட்கள் மட்டுமே பிரதமராக பொறுப்பு வகித்த லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய நிதிநிலை அறிக்கையில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகின.
ஆனால், லிஸ் ட்ரஸின் இந்த முடிவு பொருளாதாரத்தை உயர்த்த உதவவில்லை என்பது மட்டுமின்றி அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மேலும், டொலருக்கு நிகரான பிரித்தானிய பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது.
பங்குச் சந்தை மதிப்புகளும் சரிவை எதிர்கொண்டன. விலைவாசியும் நாளும் அதிகரித்தது. இந்த நிலையில் தனது தவறான பொருளாதார கொள்கைகளுக்கு லிஸ் ட்ரஸ் மன்னிப்புக் கோரியதுடன் ராஜினாமா முடிவையும் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, நாட்டின் புதிய பிரதமர் யார் என்ற அறிவிப்பை திங்கட்கிழமை வெளியிட இருப்பதாக கன்சர்வேட்டிவ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் தற்போது மீண்டும் ரிஷி சுனக் பெயர் அடிபடத்தொடங்கியுள்ளன.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர்களின் ஆதரவு பெறுபவர் போட்டியில் இடம்பெறுவார். அதன் அடிப்படையில், தற்போது முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன், முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், பாதுகாப்புத் துறை செயலர் பென் வாலஸ் மற்றும் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தலைவர் பென்னி மொரடான்ட் ஆகிய நால்வர் உள்ளனர்.
இந்த நால்வரில் தற்போது ரிஷி சுனக் மீண்டும் முன்னணியில் இருப்பதாகவே கூறப்படுகிறது. யூ-கோவ் என்ற மீடியா நிறுவனம் முன்னெடுத்த கருத்துக்கணிப்பில் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் வர வேண்டும் என்று 55% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Sky Bet அறிக்கையிலும் ரிஷி சுனக்கே முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதாரத்தை முன்வைத்து அடுத்தடுத்து இரண்டு பிரதமர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், நிதி அமைச்சராக பொறுப்பு வகித்து பொருளாதாரத்தில் முன் அனுபவம் அதிகமுள்ள ரிஷி சுனக் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட வேண்டுமென ஆதரவு குரல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.