மாபெரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியில் பிரித்தானியா!
பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு நெருக்கடி காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் உணவினை தவிர்த்து வருவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆண்டை விட 14.5 % அதிகரித்ததன் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் 9.9% ஆக இருந்த நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 10.1% ஆக உயர்ந்துள்ளது.
இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து இருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரித்தானியாவில் புதிதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் படி, மில்லியன் கணக்கான குடும்பங்கள் உணவைத் தவிர்க்கின்றன அல்லது ஆரோக்கியமான பொருட்களை வாங்க சிரமப்படுகின்றனர் என தெரியவந்துள்ளது.
மேலும் பிரித்தானியாவில் உள்ள 85% மக்கள் வாழ்க்கைச் செலவு பிரச்சனைகளின் விளைவாக உணவுப் பொருட்களை வாங்குவதற்கு குறைவாக செலவழிக்கின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பதிலளித்தவர்களில் பாதி பேர் தாங்கள் முன்பு வாங்கியதை விட மலிவான தயாரிப்புகளை வாங்குவதாக தெரிவித்துள்ளனர்.
வசதியாக வாழ்ந்ததாக தெரிவித்தவர்களில் கூட 47% பேர் உணவுக்காக செலவழிக்கும் பணத்தை சேமிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் வாழ்க்கையை கடினமான சூழ்நிலையில் கழித்ததாக தெரிவித்த 9% பேரில், பாதி பேர் தங்கள் குடும்பத்தினர் உணவைத் தவிர்ப்பதாகக் கூறியுள்ளனர்.
அனைத்து நுகர்வோரில் கிட்டத்தட்ட பாதி பேர் (46%) நெருக்கடிக்கு முன் ஒப்பிடும்போது ஆரோக்கியமாக சாப்பிடுவது கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது நிதி ரீதியாக மிகவும் கடினமாக இருப்பவர்களில் 78% ஆக உயர்ந்துள்ளது.
42% குடும்பங்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவது குறைத்து இருப்பதாகவும், 36% பேர் பல்பொருள் அங்காடிகள், பிற கடைகள் அல்லது ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதாகவும் கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது.