ஒரு நாள் உணவை தவிர்க்கும் இலட்சக்கணக்கான மக்கள்!! -வாழ்க்கை செலவு அதிகரிப்பால் பிரிட்டனில் பரிதாப நிலை-
உலகில் உள்ள வளர்ந்த நாடுகளில் ஒன்றாக உள்ள பிரிட்டனில் பணவீக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக அங்கு நிலைமை சீரில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் புட் பவுண்டேஷன் சாரிட்டி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரிட்டனின் உணவுப் பாதுகாப்பின்மை காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் ஒரு நாள் முழுவதும் உணவைத் தவிர்ப்பதாக தெரிய வந்துள்ளது. பிரிட்டனில் கடந்த சில மாதங்களாக நிலைமை ஏற்கெனவே மோசமடைந்து வருகிறது.
நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால் நிலைமை மோசமாகி உள்ளது. கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர், பிரிட்டனில் அதிகரித்து வரும் பணவீக்கம் போன்ற காரணிகளால் அங்கு விநியோகச் சங்கிலி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறைந்த வருமானம் கொண்ட 5 குடும்பங்களில் ஒன்று உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இதனால் பிரிட்டனில் உள்ள 18 சதவீத குடும்பங்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் தங்கள் உணவு நுகர்வைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஆறு சதவீதம் பேர் ஒரு நாள் முழுவதும் உணவு ஏதும் இல்லாமல் தங்களது நாளை முடித்துக் கொண்டுள்ளனர். அதாவது அன்றைய நாள் உணவை முழுவதும் அவர்கள் தவிர்த்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து பிரிட்டன் அனுபவித்த மோசமான உணவுப் பாதுகாப்பின்மை இதுவாகும். இந்த நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் குழந்தைகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இவ்வாறு பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்குவதற்கான கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.