SuperTopAds

அரச காணி அளிப்பு பத்திரங்கள் இதுவரை கிடைக்காமை தொடர்பாக கல்முனை மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு

ஆசிரியர் - Editor III
அரச காணி அளிப்பு பத்திரங்கள் இதுவரை கிடைக்காமை தொடர்பாக கல்முனை மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு

இன்று கல்முனை 1D பொதுமக்களால் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அரச காணி அளிப்பு பத்திரங்கள் இதுவரை கிடைக்காமை தொடர்பாக கல்முனை மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது

அம்முறைப்பாடு பின்வருமாறு அமைந்திருந்தது

சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு, அரச காணிகளுக்காக விண்ணப்பம் செய்த விடயம் தொடர்பில் இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக முறைப்பாடு ;

 

01. 2004 சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த நாங்கள்,எமது பகுதியில் உள்ள அரச காணிகளுக்காக எமது பகுதி கிராம சேவகர் ஊடாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தோம்.

02. எமது விண்ணப்பங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைப்பதற்காக  கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால்  இறுதி செய்யப்பட்ட விண்ணப்பத்தில்  எமது ஒப்பங்களும் பெறப்பட்டது. 

03. குறித்த அரச காணி அளிப்பு விண்ணப்பங்கள் செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகியும் அளிப்பு பத்திரங்கள் எங்களுக்கு கிடைக்க பெறவில்லை. 

04. கடந்த மாதம் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தினால் எமக்கு கடிதம் ஒன்று கிடைக்க பெற்றது. அக்கடிதத்தில் கடந்த மாதம் 12 ம் திகதியான எமக்கான ஜனாதிபதியின் அளிப்பு பத்திரங்கள் வழங்க உள்ளதாகவும், தேசிய அடையாள அட்டை உடன் மு. ப 10 மணிக்கு கல்முனை தெற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்துக்கு வருமாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

05. கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற கடிதத்தின் பின்னரே குறித்த அரச காணி அளிப்பு பத்திரங்கள் மூன்று வருடங்களுக்கு முன்னரே அன்றைய ஜனாதிபதியினால் வழங்கப்பட்டு இருந்தது அறிய வந்தது. 

06. குறித்த விடயம் தொடர்பில் கடந்த மாதம் 12 ம் திகதி எம்மால் ஜனாதிபதிக்கும், மாவட்ட அரசாங்க அதிபருக்குமாக இரண்டு மகஜர் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஊடாக வழங்கி இருந்தோம். ( மகாஜர் பிரதி இணைக்கப்பட்டு உள்ளது )

அந்த மகாஜரில் பிரதானமாக உள்ளடக்கி இருந்த விடயம். 

* கல்முனை 01 D கிராம சேவகர் பிரிவு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் வரும் ஒரு பிரிவாகும். எங்களுக்கான காணி விண்ணப்பத்தை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஊடாகவே செய்திருந்தோம். ஆனால் எங்களுக்கான காணி அளிப்பு பத்திரங்களை கல்முனை தெற்கு பிரதேச செயலகம் என்ன காரணத்துக்காக எங்களுக்கு வழங்கி வைக்கிறது ! என்பது எங்களுக்கு தெரியவில்லை. 

* குறித்த அளிப்பு பத்திரங்கள் 3 வருடங்களுக்கு முன்னர் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தினால் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திடம் வழங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறெனில், ஏன் இந்த கால தாமதம் ? 

* நாங்கள் அரச காணிகளை கோரி விண்ணப்பம் செய்தது, எமது பிரதேச செயலகமான  கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஊடாகவே. நாங்கள்

எமக்கான ஜனாதிபதியின் அளிப்பு பத்திரங்களை எமது பிரதேச செயலகமான கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஊடாகவே பெற நாங்கள் விருப்பத்தை தெரிவிக்கிறோம். 

எமது கோரிக்கையையும், எமது சந்தேகங்களையும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் தெரியப்படுத்தி அந்த மகஜரை வழங்கி இருந்தோம்.

மகஜரை பெற்றுக் கொண்ட கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் இரண்டு வாரங்களுக்குள் இந்த விடயத்தை முடித்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியும் இருந்தார். 

 2022.10.17 ம் திகதியாகிய இன்று வரை ஜானதிபதி வழங்கிய அளிப்பு பத்திரத்தை வழங்காது உள்ளனர். 

ஆகவே. 

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளரிடம் ;

01. எம்மால் வழங்கப்பட்ட மகஜருக்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்ற விடயத்தை விசாரணை செய்யவும்.

கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரதேச செயலாளரிடம் ;

01. 2019 இல் வழங்கி ஜனாதிபதியினால் வைக்கப்பட்ட எங்களுக்கான அளிப்பு பத்திரங்களை உரிய காலத்தில் வழங்காது 3 வருடங்களுக்கு மேலாக என்ன காரணத்துக்காக மறைத்து / காலதாமதம் செய்தீர்கள் ? தமிழ் மக்கள் என்ற காரணத்தினால் அரச சேவையை வழங்காது, அரச நிர்வாக துஷ்பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணை செய்யவும். 

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ;

01. இந்த விடயம் தொடர்பில் தங்களுக்கு குறித்த பிரதேச செயலாளர்கள் தங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியது தொடர்பில் விசாரணை செய்யவும்.

இந்த முறைப்பாட்டை செய்கிறோம்.