SuperTopAds

மகனின் திருமணத்திற்கேனும் தந்தையை விடுதலை செய்து தாருங்கள்! ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிடம் தாய் ஒருவர் உருக்கமான கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
மகனின் திருமணத்திற்கேனும் தந்தையை விடுதலை செய்து தாருங்கள்! ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிடம் தாய் ஒருவர் உருக்கமான கோரிக்கை..

எனது கணவர் கைது செய்யப்பட்டு 12 வருடங்கள் கடந்த நிலையில் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் பூர்த்தி அடைந்துள்ள நிலையில் கணவரை விடுவிக்க உதவுமாறு தாய் ஒருவர் ஆளுநரிடம் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளார். 

நேற்று திங்கட்கிழமை தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்தபோது தாய் ஒருவர் மேற்படி கோரிக்கை விடுத்தார். குறித்த தாய் ஆளுநரிடம் மேலும் தெரிவித்ததாவது,

எனது கணவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 12 வருடங்களாகச் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவர் உடல் நலக் குறைவினால் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்துவரும் நிலையில் அவரின் நோய் நிலையை கருத்தில் கொண்டு விரைவாக விடுதலை செய்வதற்கு உதவ வேண்டும்.

இம்மாதம் 10ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என திகதி அறிவித்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனது பிள்ளைகளை தந்தை இல்லாமல் 12 வருடங்களாக கல்வி கற்பித்தேன், தற்போது அவர்கள் திருமண வயதை அடைந்துள்ளனர்.

என்னுடைய மகனுக்கு திருமணத்துக்காக ஏற்பாடுகளிடம் பெற்றுவரும் நிலையில் அப்பா விடுதலையாகியதும் திருமணத்தை வைக்கலாம் என மகன் விரும்புகிறார். ஆகையால் மகனின் திருமணத்தை நடத்துவதற்கு தந்தையை விடுதலை செய்து தருமாறு மனைவி ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார்.