SuperTopAds

தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை பரிசோதனை!! -உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்திய வடகொரியா-

ஆசிரியர் - Editor II
தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை பரிசோதனை!! -உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்திய வடகொரியா-

தொலைதூரம் பயணித்து எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட இரு ஏவுகணைகளை செலுத்தி வடகொரியா பரிசோதித்து உள்ளது என கொரிய ஊடக தகவல் தெரிவிக்கின்றது.

கொரிய எல்லை பகுதியில் அமெரிக்க கடற்படையுடன், தென்கொரியா நாட்டின் கடற்படை இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதனை வடகொரியா கடுமையாக எதிர்த்தது. மேலும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா கடந்த 2 வாரங்களாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக வடகொரியா கடந்த ஞாயிற்று கிழமை அடுத்தடுத்து 2 குறுகிய தொலைவு 'பாலிஸ்டிக்' ரக ஏவுகணைகளை சோதித்தது.

இந்த நிலையில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-அன் மேற்பார்வையில் அந்நாடு தொலைதூரம் சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட 2 ஏவுகணைகளை செலுத்தி பரிசோதித்து உள்ளது. இந்த பரிசோதனையானது, நீண்டதொலைவு சென்று தாக்க கூடிய ஏவுகணைகளின் திறனை மேம்படுத்தும் நோக்கில் அமைந்து உள்ளது.

எதிரி நாடுகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் அணு ஆயுத குவிப்பில் தொடர்ந்து வடகொரியா ஈடுபட்டு வருகிறது. இந்த பரிசோதனையின் முடிவில் கிம் அதிக திருப்தியடைந்து உள்ளார்.

நாட்டின் அணு ஆயுத எதிர்ப்பு படைகளின் அதீத ஆற்றல் திறமைகளை அவர் பாராட்டி உள்ளார் என்று கொரிய ஊடக செய்திகள் தெரிவித்து உள்ளன. வடகொரிய அதிபர் கிம், கடந்த சில நாட்களாக அணு ஆயுத பயிற்சி நடைமுறைகளை தொடர்ந்து மேற்பார்வை செய்து வருகிறார்.

கடந்த திங்கட் கிழமை கூட, அந்நாட்டின் எந்த இடம் என தெரிவிக்கப்படாத பகுதியில் இருந்து, ஏவுகணை பரிசோதனை ஒன்றை கிம் மேற்பார்வையிடும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிட்டன.