SuperTopAds

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கான சேவை இம்மாத இறுதிக்குள் ஆரம்பம்!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கான சேவை இம்மாத இறுதிக்குள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழ் நாட்டுக்கான விமானசேவை இம்மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் இந்தியாவுக்கான விமான சேவைகள் இடம்பெறள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் திடமான சேவையை வழங்க முடியவில்லை. 

அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பின் பேரில் சிவில் விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர் நிமல் சிறிபாலடிசில்வா யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை பார்வையிட்ட பின்னர் அதனை மீள செயல்படுத்துவதாக ஊடகங்களுக்கு கருத்து கூறியிருந்தார்.

அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்ட அமைச்சு ஏயார் இந்தியா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தைகள் மேற்கொண்ட நிலையில் குறித்த நிறுவனம் தனது விமானத்தை இயக்குவதற்கு முன் வந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக விமானத்துக்கு தேவையான எரிபொருளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பெற்றுக் கொள்வது மற்றும் கட்டணங்கள் தொடர்பில் குறித்த நிறுவனம் விமானத்தை இயக்குவதற்கு பின்னடித்துவந்த நிலையில்,

தற்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழ்நாட்டுக்கான விமான சேவைகளை மேற்கொள்வதற்காக இந்திய தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ள நிலையில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் பணிகள் விரைவில் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையுடன் இடம்பெறவுள்ளது.

குறித்த விமான சேவையை இயக்குவதற்காக துறைசார்ந்த அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இலங்கைக்கான இந்தியா தூதரகமும் அதற்கு ஒத்துழைப்பை வழங்கியது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தனது இலக்கை அடைய இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்தியாவின் முக்கிய பிரமுகர்களை சந்தித்தபோது கோரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வாறான நிலையில் அனைவரினதும் கூட்டு முயற்சியினால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் தமிழ்நாட்டுக்குமான விமான சேவைகள் இம்மாத இறுதிகுள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.