போதைப்பொருள் விற்பனை செய்கின்றவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை அதிகாரிகளால் எடுக்கப்படுவதில்லை -மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள்
போதைப்பொருள் விற்பனை செய்கின்றவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை அதிகாரிகளால் எடுக்கப்படுவதில்லை -மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள்
போதைப்பொருள் விற்பனை செய்கின்றவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் எடுக்கப்படுவதில்லை என கண்டித்து ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சகல பாடசாலைகளிலும் கவனயீர்ப்பு போராட்டம் திங்கட்கிழமை(3) நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கம் சமூக நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிறுவர் தினத்திற்கு இணையாக இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் செய்கின்றவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியும் மாணவர்களும் பெற்றோர்களும் பல்வேறு வாசகங்களை ஏந்திய சுலோக அட்டைகளை தாங்கி நின்றனர்.
அத்தோடு கோசங்களை எழுப்பியவாறும் பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
கடந்த சில காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றவர்கள் மாணவர்களை இலக்கு வைத்து பாடசாலைகளில் போதைப்பொருளை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனிநபர் ஒருவர் பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டு 15 ஆசிரியர்கள் இணைந்து கையொப்பமிட்டு அக்கரைப்பற்று பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர். ஆனாலும் அவ்விடயம் தொடர்பில் உரிய நபர் கைது செய்யப்படாது உரிய நபரை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு அழுத்தங்கள் ஆசிரியர்கள் மீது பிரயோகிக்கப்பட்டதாகவும் இதனை அடிப்படையாக வைத்து பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆசிரியர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதனால் தங்களுக்கு பாதுகாப்பில்லை என்பதுடன் மாணவர்களும் உளரீதியாக பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதனை அடிப்படையாக வைத்தே இன்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள அனைத்து பாடாசாலைகளிலும் இக்கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டதுடன் அவ்விடத்திற்கு சென்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப்பணிப்பாளர் கீ.கமலமோகனதாசன் ஆகியோரிடமும் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
இங்கு போதைப்பொருளுக்கு எதிரான வீதி நாடகமொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் இன்று சம்மந்தப்பட்ட நபர் அக்கரைப்பற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.