கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகாவும் இதனால் வீதியில் பயணிப்போர் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கடும் அசௌகரியங்களுக்குள்ளாகிவருவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்ப்பட்ட முல்லைத்தீவு நகர் பகுதி முள்ளியவளை, தண்ணீரூற்று நகர்ப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு நகர்ப்பகுதிகளிலும் வீதிகளிலும் நாளாந்தம் இரவு வேளையில் நூற்றுக்கணக்கான கட்டாக்காலி கால்நடைகள் காணப்படுகின்றன
இரவு நேரங்களில் வீதிகளில் நிற்கும் கட்டாக்காலி கால்நடைகலால் நாளாந்தம் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் பாதிக்கப்படுவதோடு பாரிய இழப்புக்களும் ஏற்பட்டு வருவது மாத்திரமின்றி கால்நடைகள் பலவும் இறக்கின்றன இவ்வாறு வீதிகளில் காணப்படும் கால்நடைகளால் தொடர்ச்சியாக பாதிக்கப்படும் மக்கள் இதனை கட்டுப்படுத்த உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இதனை விடவும் நகர்ப்பகுதிகளில் உள்ள குறித்த கட்டாக்காலி கால்நடைகளால் வர்த்தகர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக குற்றம் சுமத்துகின்றனர் வர்த்தக நிலையங்களில் உள்ள பொருட்களுக்கு கால்நடைகளால் சேதம் ஏற்படுத்தப்படுவது மாத்திரமின்றி வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக இரவு கால்நடைகள் தங்குவதால் மறுநாள் காலை குறித்த இடத்தை சுத்தம் செய்ய பாரிய இடர்களை எதிர்நோக்குவதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்
இவ்வாறு பல்வேறு தரப்பினருக்கும் இடையூறாக இருக்கும் கால்நடைகளை அதிலிருந்து பயன் பெரும் கால்நடை உரிமையாளர்கள் உரிய வகையில் பராமரிக்க வேண்டும் எனவும் தவறும் படசத்தில் பிரதேச சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேச சபையிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் இதற்கான நடவடிக்கை இல்லை எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.