SuperTopAds

தமிழக முகாம்களில் உள்ள ஈழ அகதிகள் தாயகம் திரும்ப வழி செய்யப்படவேண்டும், மாநகரசபை உறுப்பினா் ந.லோகதயாளன் இந்திய துணை துாதரகத்திடம் கோாிக்கை.

ஆசிரியர் - Editor I
தமிழக முகாம்களில் உள்ள ஈழ அகதிகள் தாயகம் திரும்ப வழி செய்யப்படவேண்டும், மாநகரசபை உறுப்பினா் ந.லோகதயாளன் இந்திய துணை துாதரகத்திடம் கோாிக்கை.

தமிழ்நாட்டில் உள்ள எமது உறவுகளின் பயணத்தில் உள்ள தடையை நீக்க ஆவண செய்யுமாறு கோரி யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஊடாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ந.லோகதயாளன் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

தாயகத்தில் இருந்து உயிரைக் காக்க மிகச் சிறிய படகுகளில் மன்னாரில் இருந்து படகு ஏறி தமிழ் நாட்டிற்குச் சென்ற எம் உறவுகள் இன்று தமிழ்நாட்டு அகதி முகாமின் நெருக்கடி மற்றும் அரசுகளின் கண்டுகொள்ளாமையினால் மீண்டும் அதே அவலப் பயணத்தின் மூலம் தாயகம் திரும்புகின்றனர். 

நாட்டில் இடம்பெற்ற போரின் காரணமாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் மக்கள் இந்தியாவிற்கு தப்பியோடினர். இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தாவில் பல்வேறு இடங்களிலும் உள்ள 150ற்கும் மேற்பட்ட முகாம்களில் கூடுகளில் அடைக்கப்பட்ட பறவைகள் போன்றே அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தாயகம் திரும்புவோர் தெரிவிக்கின்றனர்.

இங்கிருந்து உயிரைக் காக்க தப்பியோடிய உறவுகள் அங்கும் உயிரைத் தவிர வேறு எதற்குமே உத்தரவாதமற்ற வாழ்வே வாழ்வதாக பட்டியலிடுகின்றனர். கடந்த 5ம் திகதி தாயகம் திரும்பிய 12 பேரில். ஓர் 9 மாதக் குழந்தை தாய் தந்தையின்றி தனித்தே பயணித்துள்ளது. 

இதில்  தாயகத்திலிருந்து  இந்தியாவிற்கு அகதியாகச் சென்ற திருகோணமலையைச் சேர்ந்த 11 பேர் உட்பட 12 பேர் அன்று  தாயகம் திரும்பிய நிலையில் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள்  2006ம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து  இந்தியாவிற்குச் சென்ற நிலையில் இந்தியாவில் திருமணமாகி வாழ்ந்து வந்த நிலையில் முகாமை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது இந்தியாவில் இருந்து தாயகம் திரும்புவதானால் விசாவின்றித் தங்கியிருந்தமைக்கான குற்றப்பணத்தைச் செலுத்தியே விசாவினை பெற்றுத் தாயகம் திரும்ப முடியும் என்பதனால் அதற்கு  அதிக பணம் செலவு ஏற்படும் என்ற நிலையில் 

 படகிற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா இந்தியப் பணத்தினை வழங்கி 24ம் திகதி புறப்பட்டு  கரையை அண்டிய பகுதியில் 8 நாட்கள் தங்கியிருந்து 5ம் திகதி  காங்கேசன்துறையை அடைந்துள்ளனர்.     குறித்த 12 அகதிகளில் 3 பெண்கள் , 4 சிறுவர்கள் , 5 ஆண்களும் அடங்குகின்றதோடு ஓர் 9 மாத கைக்குழந்தையும் தனியாக பயணிக்கும் அவலமும் நிகழ்ந்தது. 

இதில்  9 மாதக் குழந்தையின் தாயார் கடந்த ஏப்பிரல் மாதம்  24ம் திகதி   விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளபோதும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் இன்மையே குழந்தையை பிரிந்து பயணிக்க வைத்துள்ளது. இவர் யாழ்ப்பாணம் புத்தூர்ப் பகுதியைச் சேர்ந்தவர். 

இதேநேரம் மே மாதம் 16ம் திகதியும் தாயகம் திரும்பிய நிலையில்  4 ஈழ அகதிகள் மாதகல் கடல்ப் பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இவர்களும்  2006ம் ஆண்டு இலங்கையிலிருந்து  மன்னார் வழியாக தமிழ்நாட்டிற்கு தப்புச் சென்ற நிலையில் மண்டபம் அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 

இவ்வாறு தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் விமானம் மூலம் தாயகம் திரும்புவதற்காக நீண்டகாலமாக விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும் அதற்கான ஏற்பாட்டினை எவருமே மேற்கொள்ளாத நிலையில் படகு மூலம் தாயகம் திரும்பியுள்ளதாக கூறுகின்றனர்.

இவ்வாறு தாயகம் திரும்பியவர்களில் ஒரு பெண் ஓர் ஆணுடன் இரு சிறுவர்களும் அடங்குகின்றனர். சிறுவர்கள் 7 வயது மற்றும் 11 மாதங்களை உடைய சிறுவர்களும் உள்ளடங குகின்றனர்.  

இவர்கள்  மண்டபம் முகாமில் இருந்து வேதாரணியம் வழியாக இந்திய மீனவர்களின் படகில் புறப்பட்டு நடுக் கடலில் இலங்கை மீனவர்களின் படகிற்கு மாற்றப்பட்ட நிலையில் கரைசேரும் நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு தாயகம் திரும்பியவர்களில் ஒருவரான 30 வயது சந்திரலேகா  மண்டபம் முகாமில் 9855 இலக்கப் பதிவில் வாழ்ந்தவர்   தாயகத்தில் இருந்து இடம்பெயர்ந்து செல்லும்போது அவருற்கு  17 வயது. 

இவரின் தாய் , தந்தை இருவருமே இறந்து விட்டனர். இவரிற்கு  7 வயது  பெண் குழந்தையும் 11 மாதக் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில்  கணவர் தற்கொலை புரிந்துள்ளார்.

இதே நேரம் முகாமில்  ஆரம்பகாலத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டபோதும் தற்போது மாதம் ஒன்றிற்கு  குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாவும் அதனை அடுத்த மூத்தவர்களிற்கு 750 ரூபாவும் 

சிறுவர்களிற்கு 500 ரூபாவும் மட்டுமே வழங்கப்படுகின்ற நிலையில் அங்கு வாழும் மக்கள் பெரும் இடரை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டுகின்றனர். 

எனவே தமிழ்நாடு முகாம் மற்றும் வெளியில் தனியார் வீடுகளில் வாழும் எமது உறவுகளில் தாயகம் திரும்ப விரும்ப விரும்புவர்களில் முகாமில் உள்ளவர்களில் சிறுவர்களிற்கு பிறப்பு சான்றிதழினையும் வெளியில் வசிப்பவர்களிற்கான விசாக் கட்டணத்தை நீக்கி தாயகம் திரும்ப ஏற்ற ஒழுங்குகளை இந்திய அரசின் ஊடக மேற்கொண்டு உதவ வேண்டும்.

அவ்வாறு மேற்கொள்ளாத நிலையில் எமது உறவுகள் சிறு படகுகள் மூலம் கடல்ப்பயணத்தை மேற்கொண்டு தாயகம் திரும்பும் சந்தர்ப்பத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுன் அப்பழிச் சொல்லினால் இவ்வளவு காலமும் எமது உறவுகளிற்கு வழங்கிய அடைக்கலத்தின் பயனும் கேள்விக்குட்பட்டதாகும் நிலமை ஏற்படும் . 

எனவே இவ்விடயம் தொடர்பில் இந்திய அரசின் ஊடாக எமது உறவுகள் தாயகம் திரும்ப இந்திய அரசு பின்பற்றும் கட்டுப்பாடுகளை குறுகிய காலத்திற்கு தளர்த்துவதன் மூலம் அல்லது அவர்களை தனியான கப்பல்கள் மூலம் மன்னாரிற்கு அழைத்து வருவதன் மூலம் 

இவ்விடயத்திற்கு உடன் தீர்வு கண்டு உதவுமாறு தயவுடன் வேண்டுகின்றேன். என்ற வேண்டுதலே புதிய தூதுவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.