'பென்சில்' பட இயக்குநர் திடீர் மரணம்!!
இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பென்சில்' படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் தனது 46 ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
நடிகர் ஜீ.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீதிவ்யா நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பென்சில்'. இந்தப் படத்தை இயக்கியிருந்தார் மணி நாகராஜ். இதையடுத்து கோபிநாத், அனிகா சுரேந்திரா, வனிதா விஜய்குமார், லீனா குமார், சீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் 'வாசுவின் கர்ப்பிணிகள்' படத்தை இயக்கினார்.
கடந்த ஜூலை 7 ஆம் திகதியன்று இப்படத்தின் ப்ரஸ்ட் லுக்கை நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்தப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில், இன்று வியாழக்கிழமை மதியம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட மணி நாகராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.