கடற்றொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இழப்பை ஈடுசெய்யும் வகையில் நிவாரணம், ஜனாதிபதியுடன் விரைவில் சந்திப்பு..
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் இழப்பை சமாளிக்கும் வகையில் நிவாரணம் வழங்க ஜனாதிபதி இணக்கம் தொிவித்துள்ளதாக கடற்றொழிலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
மேலும் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு ஒன்றினை ஒழுங்கமைத்துக் கொடுப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளரின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்றைய தினம் (23) இடம்பெற்றிருந்தது.
இச்சந்திப்பில் கருத்து தெரிவித்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், தமது தொழில் செயற்பாடுகளுக்கு தேவையான மண்ணெண்ணை மற்றும் டீசல் போன்றவை தாராளமாக கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன்,
மண்ணெண்ணையின் விலையேற்றம் தொடர்பிலும் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டதுடன், ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை, குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
இதன்போது கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அவை தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, அண்மைய நாட்களில் அதிகரித்துள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் கலந்துரையாடி
தீர்க்கமான முடிவினை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும், விரைவில் இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.