இலங்கை தமிழர்கள் 76 பேருடன் கனடா வந்த கப்பல்!! -கனடா அரசு எடுத்துள்ள முடிவு-
கனடாவில் வாழும் புலம்பெயர்ந்தோர் பலர் எம்வி ஓஷன் லேடி என்னும் கப்பலை மறந்திருக்கமாட்டார்கள். குறித்த கப்பல் 2009 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி, 76 தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கையிலிருந்து ஏற்றிக்கொண்டு வந்த கப்பல்தான் அது.
அக் கப்பலை வான்கூவர் தீவின் மேற்குக் கரையருகே வழிமறித்தார்கள் கனடா அதிகாரிகள். பின்னர் அந்தக் கப்பலில் இருந்தவர்கள் அகதி நிலை கோரி விண்ணப்பித்தார்கள். 2010 ஆம் ஆண்டில், அந்த கப்பலில் வந்தவர்களில் பெரும்பாலானோர் ரொரன்றோவில் குடியமர்ந்ததாக கூறப்படுகிறது.
தற்போது அவர்களுடைய நிலை என்ன என கனடா எல்லைப் பாதுகாப்பு ஏஜன்சியால் கூற இயலவில்லை. பல ஆண்டுகளுக்குமுன் பலர் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், சிலர் நாடுகடத்தப்பட உத்தரவிடப்பட்டதாகவும், அகதி நிலை நிராகரிக்கப்பட்ட சிலர் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ததாகவும் ஒர் தகவல் தெரிவிக்கிறது.
இந்நிலையில், நீண்ட காலமாக பிரிட்டிஷ் கொலம்பியக் கடற்கரையில் நின்றிருந்த அந்த கப்பலை இப்போது கேம்ப்பெல் நதிக்குக் கொண்டு சென்று பிரிப்பது என அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.
1990ஆம் ஆண்டு ஜப்பானில் கட்டப்பட்ட அந்த கப்பல், முன்பு இளவரசி ஈஸ்வரி என அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.