SuperTopAds

யாழ்.புங்குடுதீவில் நாயை குரூரமாக கொலை செய்த பிரதான சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரண்! பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.புங்குடுதீவில் நாயை குரூரமாக கொலை செய்த பிரதான சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரண்! பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு..

யாழ்.புங்குடுதீவில் நாயை கோடாரியால் வெட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் தலைமறைவாக இருந்த முதன்மை சந்தேகநபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

சந்தேகநபரை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவரை எதிர்வரும் 29ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. 

நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்யும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகியது.புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 மற்றும் 35 வயதுடைய இருவர் இந்த மாத ஆரம்பத்தில் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். நாயை வெட்டிக் கொல்லப் பயன்படுத்தி கைக்கோடாரி 

மற்றும் அதனை காணொளி எடுத்த அலைபேசி என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.போதைப்பொருளுக்கு அடிமையாகியதால் ஊரில் திருட்டுகளில் ஈடுபட்டோம். எம்மைக் கண்டவுடன் நாய் குலைத்து காட்டிக்கொடுத்துவிடும்.

இதனால் அங்கு இடம்பெறும் திருட்டுகளுடன் எமக்குத் தொடர்பு உண்டு என பொலிஸார் விசாரணைக்கு அழைப்பார்கள். அதனால்தான் அந்த நாயைக் கொலை செய்தோம். கைக்கோடாரியினால் வெட்டி கொலை செய்தவர் அன்று போதையில் இருந்தார். 

சில நாள்களுக்கு முன்பாகவே நாயை கொலை செய்துவிட்டோம்.அதன் காணொளி சகோதரனின் அலைபேசியில் இருந்தது. அந்தக் காணொளி தவறுதலாக ரிக்ரொக்கில் பதிவேற்றப்பட்டுவிட்டது.

என்று காணொளியை பதிவெடுத்தவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார். சந்தேக நபர்களை சட்ட மருத்துவரின் முன் முற்படுத்தி அறிக்கை பெற்ற பின் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் முதன்மைச் சந்தேக நபர் கிளிநொச்சியில் தலைமறைவாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். முதன்மை சந்தேக நபர் இன்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்தார். 

அவர் மிருகவதைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது பிணை வழங்க மறுத்த மன்று 14 நாள்களுக்கு சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. இந்த கொடூரச் சம்பவம் சமூக மட்டத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில் 

யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகேயின் உத்தரவில் நாயைக் கொலை செய்தவர் மற்றும் உடந்தையாக இருந்தோர் மீது மிருக வதைச் சட்டத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.