சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் அதிரடி கைது!!
பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த முறைப்பாட்டிற்கு அமைய பிரபல சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
1991 ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான சேரன் பாண்டியன் படத்தின் மூலம் திரையுலகிற்கு திரைப்பட சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் கனல் கண்ணன்.
சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் கனல் கண்ணன், பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில், உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பேசியிருந்தார். இவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் தெரிவித்து வந்தனர்.
அதன்பின்னர் கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை பிரதான பொலிஸ் தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் முறைப்பாடு செய்தார். குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து முன் பிணை கோரி கனல் கண்ணன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த முறைப்பாட்டில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணனை பாண்டிச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.