20 ரூபாவுக்காக 8000 நாட்கள் நீதிமன்றில் போராட்டம்!! -100 வழக்கு தவணைகளின் பின் வெற்றி பெற்ற நபர்-
ரயில் அனுமதிச் சீட்டில் 20 ரூபா மோசடி செய்யப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 22 வருடங்களின் பின்னர் இந்திய குடிமகன் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் வசிக்கும் 66 அகவையை கொண்ட, துங்கநாத் சதுர்வேதி என்ற இவர், 1999 ஆம் ஆண்டு, ரயில் அனுமதிச் சீட்டு ஒன்றை கொள்வனவு செய்யும்போது, அனுமதிச் சீட்டை வழங்கியவர் 70 ரூபாவுக்காக 90 ரூபாவை வசூலித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் துங்கநாத நுகர்வோர் நீதிமன்றில் வழக்கை தாக்கல் செய்தார். குறித்த வழக்கு சுமார் 100 தவணைகளில் அழைக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதன்படி 20 ரூபாவை இந்திய ரயில் திணைக்களம், மனுதாரரான சதுர்வேதிக்கு திருப்பித் தர வேண்டும். அத்துடன், 1999ம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்காக 12 வீத வட்டியையும் சேர்த்து 15 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த 15 ஆயிரம் ரூபா அபராதத்தை 30 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், வட்டியாக 15 வீதம் அறிவிடப்படும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.