தமிழகத்தில் ஈழத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் கட்டுமானப் பணிக்கு தடை!! -சென்னை மேல்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு-
தமிழகத்தில் கரூர் மாவட்டத்தின் ஈழத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் கட்டுமானப் பணிக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை மேல்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுமீதான விசாரணையின்போது, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தோரணக்கல்பட்டியில் ஈழத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் அமைக்க 2014 இல் அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அந்தத்திட்டம் கைவிடப்பட்டு, பேருந்து நிலையம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன், முகாம் அமைக்க, அரவக்குறிச்சி அருகே இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது முகாமை மீண்டும் தோரணக்கல்பட்டியில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
எனினும், முகாம் அமைக்க உத்தேசிக்கப்பட்ட இடம் குடியிருப்புக்கு ஏற்ற பகுதி அல்ல என்றும், அங்கு ஈழத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் அமைப்பதற்கான பணிகளை நிறுத்தி வைத்து, அரவக்குறிச்சி வட்டத்தில் அமைக்க உத்தரவிட வேண்டும் என குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
அந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, முகாம் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர் தொடர்பில் நீதிபதிகள் வினவியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த அரச தரப்பு, குறைந்தபட்சமாக விலை கோரும் ஒப்பந்ததாரர் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைப்பதற்கான பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்தும், எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன், வழக்கு விசாரணையை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்ததாக தமிழக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.