அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்!! -அல்ஹைதா தலைவர் மரணம்-
அமெரிக்காவின் தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் அல்ஹைதா தலைவர் அய்மன் அல் ஜவஹிரி கொல்லப்பட்டுள்ளார் என்று அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கான் தலைநகர் காபுலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சி.ஐ.ஏ நடத்திய அதிரடி நடவடிக்கையில் அய்மன் அல் ஜவஹிரி கொல்லப்பட்டுள்ளார். ஜவரிரி அமெரிக்கா மக்களிற்கு எதிரான பெரும் வன்முறை மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டிருந்தார் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வீட்டின் பல்கனியில் நின்றுகொண்டிருந்தவேளை ஆளில்லா விமானங்கள் ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த இடத்தில் ஏனைய குடும்ப உறுப்பினர்களும் காணப்பட்டனர் அவர்களிற்கு பாதிப்பு ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
71 வயது அல்ஹைதா தலைவர் மீது துல்லிய தாக்குதலை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்கினேன் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2011 இல் ஓசாமாபின்லாடன் கொல்லப்பட்ட பின்னர் அய்மன் அல் ஜவஹிரி அல்ஹைதாவின் தலைவராக பொறுப்பேற்றார்.
செப்டம்பர் 11 தாக்குதலை ஒசாமா பின் லாடனுடன் இணைந்து ஜவஹிரி திட்டமிட்டார் என அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.