SuperTopAds

ஈராக் பாராளுமன்றை முழுமையாக கைப்பற்றி போராட்டக்காரர்கள்!! -பாடல் பாடி, நடனமாடி வெற்றிக் கொண்டாட்டம்-

ஆசிரியர் - Editor II
ஈராக் பாராளுமன்றை முழுமையாக கைப்பற்றி போராட்டக்காரர்கள்!! -பாடல் பாடி, நடனமாடி வெற்றிக் கொண்டாட்டம்-

ஈராக் நாட்டின் பாராளுமன்றை முற்றுமுழுதமாக கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்கு பாடல் பாடி, நடனமாடி, மேசைகளில் படுத்திருந்து தமது வெற்றியை வெளிப்படுத்தினர்.

ஈராக் ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் ஊழலுக்கு எதிராக, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள பாராளுமன்ற கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டத்தை மேற்கொண்டனர்.

2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அல்-சதருடைய கட்சி 73 இடங்களை கைப்பற்றி அதிக ஆசனங்களை பெற்ற கட்சியாக காணப்பட்டது. எனினும் ஆட்சிப் பொறுப்பு ஏற்பது தொடர்பில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே இழுபறி ஏற்பட்டது.

மதபோதகர் முக்தாதா அல்-சதரின் ஆதரவாளர்கள், பிரதமர் பதவிக்கு போட்டி வேட்பாளரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் மொஹட் அல் -சுடானி  பெயர் பிரதமர் பதவிக்காக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அல்-சதருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, பாராளுமன்றத்துக்குள் நுழைந்து பாடல் பாடி, நடனமாடி, மேசைகளில் படுத்திருந்த போராட்டக்காரர்களை கட்டடத்தை விட்டு வெளியேறுமாறு ஈராக் நாட்டின் தற்போதைய பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, அழைப்பு விடுத்துள்ளார்.

பலத்த பாதுகாப்புடன் கூடிய உயர்பாதுகாப்பு வலயத்தை உடைக்கும் போராட்டக்காரர்களைத் தடுக்கும் முயற்சியில் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி தடுத்தார்கள்.

ஈராக் - பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் தடைகளை மீறி, அந்நாட்டின் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ள போதிலும், எண்ணெய் வளம் கொண்ட ஈராக் அரசியல் மற்றும் சமூக பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.