சண்டிமால், மெண்டிஸ் பொறுப்பான ஆட்டம்!! -3 ஆம் நாள் முடிவில் இலங்கை 329/9-
சண்டிமால், மெண்டிஸ் பொறுப்பான ஆட்டத்தினால் 3 ஆம் நாள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 329 ஓட்டங்களை பெற்றுள்ளது.
பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 222 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அரை சதமடித்த சண்டிமால் 76 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். தீக்ஷனா 38 ஓட்டத்தையும், பெர்னாண்டோ 35 ஓட்டத்தையும் பெற்றுக் கொண்டனர். பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அணித்தலைவர் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 119 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், மெண்டிஸ், தீக்ஷனா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 4 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணி 2 ஆவது இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில், 3 ஆம் நாள் நேற்று நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஒஷாடா பெர்னாண்டோ அரை சதமடித்து 64 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். குசால் மெண்டிஸ் 76 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். மற்ற முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
3 ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ஒஷாடா பெர்னாடோ, குசால் மெண்டிஸ் ஜோடி 91 ஓட்டங்களை சேர்த்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சண்டிமால் நிதானமாக ஆடி அரை சதமடித்தார்.
இறுதியில் 3 ஆம் நாள் முடிவில் இலங்கை அணி 2 ஆவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 329 ஓட்டங்களை பெற்றது. சண்டிமால் 86 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் உள்ளார்.
பாகிஸ்தான் சார்பில் முகமது நவாஸ் 5 விக்கெட்டும், யாசீர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.