குழந்தைகளுக்கு உணவு வேண்டி அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்கும் இலங்கையர்கள்!! -கவலை தெரிவிக்கும் அவுஸ்ரேலிய அணித்தலைவர்-

இலங்கையில் மக்கள் தம் குழந்தைகளுக்கு உணவு வேண்டி அன்றாடம் உணவு சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர் என அவுஸ்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடியது.
உணவு, மருந்து மாத்திரை, எரிபொருள், மின்சாரம் போன்றவற்றுக்கு அந்த நாட்டில் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இருப்பினும் கிரிக்கெட் விளையாட்டு இலங்கை மக்களை கொஞ்சம் இளைப்பாற செய்திருந்தது. அண்மையில் அந்த நாட்டின் ஜனாதிபதி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அந்த மாளிகையை மக்கள் கைப்பற்றினர். அங்கிருந்த உணவுகளை உண்டனர். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. அந்த நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை உலக மக்கள் கூர்ந்து கவனித்தனர்.
இந்நிலையில், போராட்டம் குறித்து இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்ததும் பேசியுள்ளார் அவுஸ்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ். அதனை இப்போது அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போராட்டம் குறித்து அறிந்ததும் இங்கு சூழல் எப்படி உள்ளது? நாங்கள் அனைவரும் நலமா? என எங்கள் நாட்டிலிருந்து ஏராளமான மெசேஜ்கள் வந்தன. நாங்கள் இங்கு நலமாக இருப்பதாகவே உணர்ந்தோம்.
நாங்கள் தங்கியிருந்த விடுதியில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடம் பேசினோம். அதன் மூலம் அவர்கள் கடினமான சூழலில் இருப்பதை அறிந்து கொண்டோம்.
அவர்கள் தினந்தோறும் உணவு சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர் எனவும் தெரிந்தது. ஏனெனில் அதன் மூலம் அவர்கள் தங்களது குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்கின்றனர். அதை அறிந்து கொண்ட போது மிகவும் கடினமாக இருந்தது என கவலை தெரிவித்துள்ளார்.