அவுஸ்ரேலியாவை அபார வெற்றிகொண்டது இலங்கை!! -வரலாற்றுச் சாதனைகளையும் பதிவு செய்தது-
காலி சர்வதேச விளையாட்டரங்கில் நிறைவுபெற்ற அவுஸ்ரெலியாவுடனான இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் வரலாற்றுச் சாதனைகளுடன் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 39 ஓட்டங்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் இரு போட்டிகள் கொண்ட வோர்ன் - முரளிதரன் டெஸ்ட் தொடர் மற்றும் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் 1 - 1 என சமநிலையில் முடிவடைந்தது.
அறிமுக சுழல்பந்துவீச்சாளர் ப்ரபாத் ஜயசூரய பந்துவீச்சிலும் மூத்த வீரர் தினேஷ் சந்திமால் துடுப்பாட்டத்திலும் வரலாற்றுச் சாதனைகளை நிலைநாட்டி இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றினர்.
ப்ரபாத் ஜயசூரிய தனது அறிமுகப் போட்டியில் 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்ததுடன் தினேஷ் சந்திமால் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் (206) இரட்டைச் சதம் குவித்தார்.
முதல் இன்னிங்ஸ் நிறைவில் 190 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த அவுஸ்ரேலியா, இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 151 மட்டுமே பெற்று தொல்வி அடைந்தது.
இலங்கையின் சுழல்பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அவுஸ்திரெலியா திணறியதுடன் அவ்வணியில் 2 வீரர்கள் மாத்திரமே 25 ஓட்டங்களுக்கு மேல் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.