அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தெரிவு!!

ஆசிரியர் - Editor II
அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தெரிவு!!

அ.தி.மு.க பொதுக் குழுவை கூட்ட தடை ஏதும் இல்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அ.தி.மு.க பொதுக் குழு கூட்டம் ஆரம்பமான நிலையில் அக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தெரிவு செய்யப்பட்டார்.

அ.தி.மு.க பொதுக் குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் திகதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய தனித் தீர்மானம் நிறைவேற்ற நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் ஓ.பி.எஸ் நீதிமன்றத்தை நாடியதால் பொதுக் குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் கையெழுத்திட்டிருந்த 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மகிழ்ச்சியாக வந்த ஓ.பி.எஸ்ஸுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தின் வாசலில் ஆரம்பித்து அவருக்கு தொடர்ந்து அவமானங்கள் ஏற்பட்டன. மேலும் இந்த பொதுக் குழுவில் தீர்மானங்கள் நிராகரிப்பு, அவைத் தலைவர் தேர்வு, பொதுக் குழுவுக்கான மறு திகதி அறிவிப்பு என உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக ஓ.பி.எஸ் தரப்பு கூறி அங்கிருந்து வெளியேறினார் ஓபிஎஸ்.

இந்த நிலையில் அ.தி.மு.க பொதுக் குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அதில் அ.தி.மு.கவின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்பதால் அ.தி.மு.க பொதுக் குழு கூடடம் நடைபெற ஹைகோர்ட் அனுமதித்தது. இது ஓ.பி.எஸ்ஸுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க பொதுக் குழு காலை 9.15 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்களும் நிறைவேறின. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து இடைக்கால பொதுச் செயலாளர் பதவி உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை அடுத்து இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தெரிவு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.