பலமான நிலையில் அவுஸ்திரேலியா!! -அறிமுகப் போட்டியில் ஜயசூரிய பிரகாசிப்பு-
இலங்கைக்கு அணிக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் அறிமுக சுழல்பந்துவீச்சாளர் ப்ரபாத் ஜயசூரிய பிரகாசித்த போதிலும் அவுஸ்ரேலியா பலமான நிலையயை அடைந்துள்ளது.
இருப்பினும் மார்னுஸ் லபுஸ்சான், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் அபார சதங்களைக் குவித்து அவுஸ்திரேலியாவை பலமான நிலைக்கு இட்டுச் சென்றனர்.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்ரேலியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 298 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இப் போட்டியில் இலங்கை அணியில் 3 வீரர்கள் அறிமுகமானார்கள். சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ், சுழல்பந்து வீச்சாளர்களான ப்ரபாத் ஜயசூரிய, மஹீஷ் தீக்ஷன ஆகியோரே டெஸ்ட் அறிமுகம் பெற்ற மூன்று இலங்கை வீரர்களாவர்.
இந்த மூன்று அறிமுக வீரர்களில் ப்ரபாத் ஜயசூரிய 3 முக்கிய விக்கெட்களைக் கைப்பற்றி தனது தேர்வு நியாயமானது என்பதை நிரூபித்தார்.
மொத்த எண்ணிக்கை 15 ஓட்டங்களாக இருந்தபோது டேவிட் வோர்னர் வெறும் 5 ஓட்டங்களுடன் கசுன் ராஜித்தவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததால் அவுஸ்ரேலியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
தொடர்ந்து உஸ்மான் கவாஜாவும் மார்னுஸ் லபுஸ்சானும் 2 ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகம் கொடுத்தனர். கவாஜா 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ரமேஷ் மெண்டிஸின் பந்துவீச்சில் வெளியேறினார்.
அதன் பின்னர் மார்னுஸ் லபுஸ்சான், முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் மிகவும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி 3 ஆவது விக்கெட்டில் 134 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்ரேலிய அணியைப் பலப்படுத்தியதுடன் இலங்கைக்கு நெருக்கடியையும் கொடுத்தனர்.
தனது 28 ஆவது டெஸ்ட் போட்டியில் 7 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்த லபுஸ்சான் 104 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ப்ரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதுவே ப்ரபாத் கைப்பற்றிய முதலாவது டெஸ்ட் விக்கெட்டாகும்.
அதன் பின்னர் ட்ரவிஸ் ஹெட் (12), கெமரன் க்றீன் (4) ஆகியோரின் விக்கெட்களையும் ஜயசூரிய வீழ்த்தி சக வீரர்களினதும் அரங்கில் இருந்த இரசிகர்களினதும் பலத்த பாராட்டைப் பெற்றார்.
இருப்பினும் ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலிய அணியை மேலும் பலப்படுத்தினர்.
தனது 87 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 33 வயதான ஸ்டீவன் ஸ்மித் 28ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து தனது துடுப்பாட்ட ஆற்றல் மங்கவில்லை என்பதை நிரூபித்தார்.
212 பந்துகளை எதிர்கொண்ட ஸ்டீவன் ஸ்மித் 14 பவுண்டறிகள் உட்பட 109 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். அலெக்ஸ் கேரி ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இலங்கை பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 90 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.