பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் போரிஸ்!!
பிரிட்டனில், போரிஸ் தலைமையிலான அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்கள் அமைச்சர்கள் ராஜினாமா செய்து வருவதால் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய ஒப்பு கொண்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்சன் உள்ளார். கொரோனா காலத்தின் போது, சட்ட விரோதமாக மது விருந்து கொடுத்ததாக, பல புகார்கள் அவர் மீது எழுந்தன.
இதையடுத்து, அவருக்கு பொலிஸார் அபராதம் விதித்தனர். இதற்கிடையே, போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியில், அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கட்சியினரே தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம், கடந்த மாதம் பார்லிமென்டில் விவாதத்துக்கு வந்தது.
முதலில் குற்றங்களை மறுத்த போரிஸ் ஜான்சன், பின் அதை ஒப்புக் கொண்டு, பார்லிமென்டில் மன்னிப்பு கேட்டார். இறுதியில் தீர்மானம் தோல்வியடைந்ததால், போரிஸ் ஜான்சன் பதவி தப்பியது. இருப்பினும், அவருக்கு கட்சியில் எதிர்ப்பாளர்கள் அதிகரித்தனர்.
இது ஒருபுறம் இருக்க, கட்சியின் துணை தலைமை கொறடாவாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட எம்.பி கிறிஸ் பின்சரை நியமித்தார் போரிஸ் ஜான்சன். மது போதையில் தவறாக நடந்தது உட்பட பல வழக்குகள் உள்ள நிலையில், கிறிஸ் பின்சரை முக்கிய பதவியில் நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆளும் கட்சியிலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மக்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, கிறிஸ் பின்சரை அந்தப் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கிய போரிஸ் ஜான்சன், தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டார். இந்த சூழ்நிலையில், இந்தியாவை பூர்வீகமாக உடைய ரிஷி சுனாக், நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். ரிஷி சுனாக், 'இன்போசிஸ்' நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன்.
அதற்கடுத்த சில நிமிடங்களில், பாகிஸ்தானை பூர்வீகமாக உடைய சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித்தும், தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் வில் குயின்ஸ், இணை அமைச்சர் ராபின் வாக்கர் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர். ஒரே நேரத்தில் நான்கு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளது, பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கட்சியின் சமீபத்திய நடவடிக்கைகளால், மக்களிடையே செல்வாக்கு குறைந்து வருவதாகவும், தங்கள் ராஜினாமா கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். பிரிட்டனில் மொத்தம் உள்ள 122 அமைச்சர்களில் இதுவரை 49 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக கோரி அமைச்சர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். ஆனால், பிரிட்டன் சட்டத்தின்படி, 12 மாதங்களுக்குப் பின்னரே மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய முடியும்.
இருப்பினும், பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சனை நீக்குவதற்கு மாற்று வழிகள் உள்ளதாக, எம்.பி.,க்கள் சிலர் கூறியுள்ளனர். இதனால், புதிய நெருக்கடியில் போரிஸ் ஜான்சன் சிக்கியுள்ளார். இதனையடுத்து அவராகவே பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.