சிறுவர்களுக்கிடையில் கோஷ்டி மோதல்..! மிளகாய்துாள் வீச்சு மற்றும் தாக்குதலில் 5 பேர் காயம்..
இரு குழுக்களுக்கிடையில் உருவான மோதலில் படுகாயமடைந்த 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கை கலப்புடன் தொடர்புடைய குறித்த இரு குழுக்களுக்கிடையே தொடர்ந்தும் முறுகல் நீடித்து வந்துள்ளது.
இந்நிலையில் கடைக்குச் சென்ற சிறுவனை மற்றொரு குழுவினர் தாக்கியுள்ளதுடன், மிளகாய் தூள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதனால் 3 சிறுவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை மற்றைய குழுவில் உள்ள 2 சிறுவர்களும் தாம் தாக்கப்பட்டதாக தெரிவித்து அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த 5 சிறுவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சிறுவர்கள் அனைவரும் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.