கண்டியில் காணாமல்போன 14 வயது சிறுமி, யாழ்.நகரில் மீட்பு..! வீட்டாருடன் மனக்கசப்பாம்..
கண்டியில் காணாமல்போனதாக கூறப்பட்ட 14 வயதான சிறுமி யாழ்.பேருந்து நிலையத்திலிருந்து மீட்கப்பட்டு பொலிஸாரினால் கண்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார்.
கடந்த 11ம் திகதி குறித்த சிறுமியை யாழ்.நகரில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மீட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, இராசலிங்கம் பிரியதர்ஷினி (வயது14) என்ற சிறுமி கடந்த 5ம் திகதி தனது வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல்போனதாக,
பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியதுடன், குறித்த சிறுமியின் புகைப்படத்துடன் செய்திகளும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் 6 நாட்கள் கழித்து சிறுமி யாழ்.பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 5ம் திகதி தனது வீட்டிலிருந்து புறப்பட்ட சிறுமி திகன பகுதியில் உள்ள தனது நண்பி ஒருவருடைய வீட்டில் 4 நாட்கள் தங்கியிருந்த நிலையில் வீட்டுக்கு செல்லுமாறு நண்பியின் வீட்டார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் வீட்டுக்கு செல்வதாக கூறிய குறித்த சிறுமி யாழ்ப்பாணத்தில் உள்ள தனது நண்பி ஒருவருடைய சகோதரிக்கு அழைப்பு எடுத்து தனக்கு வேலை பெற்றுத்தருமாறு கேட்டிருக்கின்றார்.
இதற்கிடையில் தன்னிடம் இருந்த பணத்தில் தொலைபேசி ஒன்றை வாங்கியுள்ள குறித்த சிறமி அதனை பயன்படுத்தியே நண்பியின் சகோதரியிடம் உதவி கேட்டுள்ளார்.
எனினும் வேலை பெற்றுக் கொடுப்பதற்கு வயது போதாமையால் விடுதியில் தங்கியிருக்கும்படி நண்பியின் சகோதரி கூறியுள்ளார். இதனையடுத்து கண்டியிலிருந்து வவுனியா செல்லும் பேருந்தில் ஏறிய சிறுமி,
இரவு 11 மணிக்கு வவுனியா பேருந்து நிலையத்தை வந்தடைந்து அங்கேயே ஒருநாள் தங்கியதுடன், மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு பேருந்தில் ஏறி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதற்கிடையில் தொலைபேசி சார்ஜ் இல்லாமல்போயுள்ளது. அதனை யாழ்.நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு எடுத்துச் சென்று சார்ஜ் ஏற்றித்தருமாறு குறித்த சிறுமி கேட்டுள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே காணாமல்போனதாக சிறுமியின் புகைப்படம் ஊடகங்களில் வெளியானதை அறிந்து அடையாளம் கண்ட யாழ்.நகர வர்த்தகர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதயைடுத்து பொலிஸார் உடனடியாக சிறுமியை மீட்டு கண்டி - கலஹா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். பின்னர் கலஹா பொலிஸார் சிறுமியின் சகோதரி மற்றும் உறவினர்கள் இருவருடன் யாழ்ப்பாணம் வந்து சிறுமியை பொறுப்பேற்றுள்ளனர்.
கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் குறித்த சிறுமி இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என கூறியுள்ள பொலிஸார் சிறுமியின் பெற்றோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
இதேவேளை சிறுமிக்கு வீட்டாருடன் ஏற்பட்ட மனக்கசப்பே வீட்டிலிருந்து வெளியேற காரணம் என கூறப்படுகின்றது.