ஷண்முகா இந்துக் கல்லூரி அதிபருக்கு நீதிமன்றத்திடமிருந்து அழைப்பாணை
திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் அதிபர் லிங்கேஸ்வரிக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் எழுத்து மூலக் கட்டளைக்கிணங்க சென்ற பெப்ரவரி மாதம் 02ம் திகதி திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு கடமையேற்பதற்காக சென்றிருந்த பஹ்மிதா றமீஸ் அவர்கள் கடமையேற்க விடாது பல குழப்பங்களை ஏற்படுத்தி, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தனது சட்டரீதியான கடமையை செய்யத் தடுத்தமை என்ற குற்றச்சாட்டின் பெயரின் திருகோணமலை திரு ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றில் சென்ற மார்ச் மாதம் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். குறிப்பிட்ட வழக்கில் ஆசிரியை பஹ்மிதாவுக்கு ஆதரவாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான் றதீப் அஹமட், ஹஸன் றுஷ்தி, முஹைமின் காலித் மற்றும் ஸாதிர் அஹமட் ஆகியோர் ஆஜராகி சமர்ப்பணம் செய்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இம்மாதம் எடுத்துக் கொள்ளப்பட்டபோது சட்டத்தரணிகளான முபஸ்லீன் மற்றும் றிஸ்வான் ஆகியோர் வாதிதரப்பில் ஆஜராகி இருந்தனர். ஏலவே மன்றின் நீதிபதியவர்கள் குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் செய்ய சமர்ப்பணத்தை ஏற்று பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்ப நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார். இவ்வழக்கானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.
குறிப்பிட்ட இவ்வழக்கில் அதிபர் லிங்கேஸ்வரி நீதிமன்று குற்றவாளியாகக் காணூமிடத்து இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவை பிரிவுகள் 162,183,184,486 அடிப்படையில் சிறைத்தண்டனை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஷண்முஹா ஹபாயா விவகாரத்தில் ஆரம்பம் தொட்டு குரல்கள் இயக்கம் பாதிக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றது.