SuperTopAds

போராட்டம் நடத்துவதாக இருந்தால் இந்திவிடம் பேசுமாறு என்னை கேட்கவேண்டாம்!

ஆசிரியர் - Editor I
போராட்டம் நடத்துவதாக இருந்தால் இந்திவிடம் பேசுமாறு என்னை கேட்கவேண்டாம்!

இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் நமக்கு உதவவில்லை. இந்தியா மட்டுமே உதவுகிறது. வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதாக இருந்தால் இந்தியாவிடம் உதவி கேட்கும்படி என்னை கேட்காதீர்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வொஷிங்டனில் செயல்பட்டு வரும் சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜியேவாவை செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கைக்கு துரிதமாக நிதியுதவி அளிக்குமாறு வலியுறுத்தினேன். 

அப்போது கடன் மறுசீரமைப்புத் திட்டம் குறித்து அவருடன் ஆலோசனை மேற்கொண்டேன். சர்வதேச நிதியத்திடமிருந்து கடன் பெறுவதற்காக அனைத்து வழிகளிலும் முயற்சிக்கிறேன். 

வரும் செப்டம்பருக்குள் நிதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது, அடுத்த 6 மாதங்களுக்கு இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டமைக்க சர்வதேச நிதியத்திடம் அந்த நாடு 6 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இலங்கை மின்சார சபை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாகவும், 

இதற்கான வரைவு பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் இலங்கை அரசு தெரிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மின்சார சபை பொறியாளர்கள், புதன்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பாராளுமன்றத்தில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேசுகையில், ‘நீங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக இருந்தால், 

இந்தியாவிடமிருந்து உதவி பெறுமாறு என்னிடம் கேட்காதீர்கள். எரிபொருளுக்கும், நிலக்கரிக்கும் இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் நமக்கு உதவவில்லை. 

இந்தியா மட்டுமே உதவுகிறது. இந்தியா உடனான நமது கடன் அளவும் முடியும் தறுவாயில் உள்ளது. அதை நீட்டிப்பது குறித்து பேசி வருகிறோம்’ என்றார்.