போர் முனைக்கு நேரில் சென்ற உக்ரைன் ஜனாதிபதி!!
உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி போர் முனைக்கு நேரில் சென்று தொடர்ச்சியாக சளைக்காமல் போடிவரும் இராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தொன்பாஸ் நகரில் உள்ள படைகளை சந்தித்து பேசினார். ரஷிய படைகள் ஆக்ரோசமுடன் தாக்குதலில் ஈடுபட்டு வரும் கிழக்கு பகுதியில் அமைந்த தொன்பாஸ் தொழிற்சாலை மண்டலத்தில் இராணுவ முகாம்களுக்கு சென்றார்.
இதேபோன்று, சிவர்ஸ்கை டோனெட்ஸ் ஆற்றின் குறுக்கே அமைந்த லிசிசன்ஸ்க் பகுதிக்கும் சென்று வீரர்களுடன் உரையாடினார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரில் ரஷிய படைகள் முன்பு கைப்பற்றும் நோக்கில் நுழைந்தன. ஆனால், உக்ரைனிய படைகள் அவர்களை பின்னுக்கு தள்ளி வருகின்றன.
தொன்பாசின் டோனெட்ஸ்க் பகுதியில் இருந்து தென்மேற்கே உள்ள பாக்முத் என்ற இடத்திற்கு சென்ற ஜெலன்ஸ்கி, இராணுவ வீரர்களிடம் பேசினார். அவர் வீரர்களிடம் பேசும்போது, உங்களுடைய சிறந்த பணி, சேவை, எங்கள் அனைவரையும் மற்றும் நமது நாட்டை பாதுகாப்பதற்காக நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கடன்பட்டுள்ளேன். உங்களையும் கவனித்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.