உத்தரகாண்ட் பேருந்து விபத்து!! -பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு-
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்டின் யமுனோத்ரி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பாரிய பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இக் கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே நேற்று மாலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின்போது பேருந்தில் 28 யாத்திரிகர்கள் உட்பட மொத்தமாக 30 பேர் இருந்ததாக இந்தியாவை தளமாக கொண்டன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பாரிய பள்ளத்தாக்கு ஒன்றில் கவிழ்ந்து குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 22 பேர் உயிரிழந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. இரவு முழுவதும் தொடர்ந்து மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது இந்த விபத்தின் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.