காணாமல் போன தாயின் சடலம் பிரேத பரிசோதனைக்கான எடுத்து செல்லப்பட்டது
மருதமுனையில் காணாமல் போன தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
அம்பாறை – பெரியநீலாவணை- மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 54 வயதுடைய எம்.ஆர். பஸீரா என்ற பெண் கடந்த இரண்டு தினங்களாக காணாமல் போயிருந்தார்.
மருதமுனையில் காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தாய் 65 மீட்டர் வீடமைப்பு பகுதிக்கு பின்புறமாகவுள்ள குளப்பகுதிக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த தாய் காணாமல் சென்றமை தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் பிரதேச பள்ளிவாசல்களிலும் பொதுமக்கள் உதவி செய்யுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தன.
இதனை அடுத்து பிரதேச மக்களும் பொலிசாரும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை(2) மாலை மருதமுனை 65 மீட்டர் வீட்டுத்திட்ட குடியிருப்பு பகுதியின் பின்பக்கமாக உள்ள குளத்துக்குள் உயிரிழந்த நிலையில் தாயின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு கல்முனை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம். பதுர்தீன் மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்ரூன் இஸ்லாம் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் தலைமையில் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.