அமெரிக்க பாடசாலை துப்பாக்கிச்சூடு!! -உயிரிழந்த ஆசிரியையின் கணவர் மாரடைப்பால் மரணம்-
அமெரிக்காவில் உள்ள பாடசாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஆசிரியையின் கணவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பாடசாலைக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞன் பாடசாலை சிறுவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
இத் துப்பாக்கிச்சூட்டில் 19 பாடசாலை குழந்தைகள், 2 ஆசிரியைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை பொலிஸார் சுட்டு வீழ்த்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பாடசாலையில் 23 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வந்த இர்மா ஹர்சியா என்பவரும் அடங்குவார். அவருக்கு 4 குழந்தைகள் உள்ளன. இர்மாவின் கணவர் ஜோ ஹர்சிம்யா. இர்மா - ஜோவுக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகுகிறது.
இதற்கிடையில், பாடசாலை துப்பாக்கிச்சூட்டில் தனது மனைவி இர்மா ஹர்சிம்யா உயிரிழந்த செய்தி கேட்டது முதல் அவரது கணவர் ஜோ ஹர்சிம்யா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், இர்மாவின் கணவர் ஜோவுக்கு நேற்று வியாழக்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அவரை அருகில் உள்ள வைத்தியவாலையில் அனுமதித்தனர். ஜோவை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
பாடசாலை துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியையான தனது மனைவி இர்மா உயிரிழந்த நிலையில் அடுத்த 2 நாட்களில் அவரது கணவரான ஜோவும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.