மேத்யூஸ், சண்டிமால் அபார சதம்!! -முதல் இன்னிங்சில் இலங்கை அணி 506 ஓட்டங்கள் குவிப்பு-
இலங்கை – வங்களாதேஸ் அணிகள் மோதிக் கொள்ளும் 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட் செய்த வங்களாதேஸ் அணி 24 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் விக்கெட் கீப்பர் லிட்டான் தாசும் (135), முஷ்பிகுர் ரஹிமும் (115) சதம் அடித்து அணியை காப்பாற்றினர்.
தொடக்க நாளில் அந்த அணி 5 விக்கெட்டுக்கு 277 ஓட்டங்களை எடுத்திருந்தது. இந்த நிலையில் 2 ஆவது நாளில் தொடர்ந்து ஆடிய வங்களாதேஸ் அணி முதல் இன்னிங்சில் 365 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 143 ஓட்டங்களை எடுத்திருந்தது.
3 ஆவது நாள் ஆட்டம் நேற்று ஆரம்பமானது. திமுத் கருணாரத்னே 80 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சாகிப் அல் ஹசன் பந்தில் போல்டானார். அவரை தொடர்ந்து மெண்டிஸ் 11 ஓட்ங்களுடன் வெளியேற ராஜிதா டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.
பின் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் டி சில்வா ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அற்புதமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 58 ஓட்டங்களை பெற்ற நிலையில் டி சில்வா அவுட்டானார். 3 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 282 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில் 4 ஆவது நாள் ஆட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இலங்கை அணியின் மேத்யூஸ் ,தினேஷ் சண்டிமால் சிறப்பாக விளையாடினர். நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரின் விக்கெட் எடுக்க முடியாமல் வங்காளதேச அணியின் பந்துவீச்சாளர்கள் தடுமாறினார்.
அபாரமாக விளையாடிய மேத்யூஸ் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து தினேஷ் சண்டிமால் சதம் அடித்தார். சிறப்பாக விளையாடிய சண்டிமால் 124 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்க்சில் 10 விக்கெட்டுக்களை இழந்து 506 ஓட்டங்களை குவித்தது. அந்த அணியின் மேத்யூஸ் 145 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் .
இதனை தொடர்ந்து தனது 2 வது இன்னிங்க்சில் விளையாடிய வங்களாதேஸ் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுக்களை இழந்தது. 4 ஆவது ஆட்ட நேர முடிவில் வங்களாதேஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 34 ஓட்டங்களை எடுத்துள்ளது.